சென்னை கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் 7-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (40). இவர் டிரைவராக வேலைப்பார்த்து வருகிறார். கடந்த 19.12.2023-ம் தேதி கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனி அருகே சந்தோஷ் தன்னுடைய நண்பர் கந்தன் உட்பட சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, சந்தோஷை கந்தன் உள்பட சிலர் ஆட்டோவில் கடத்திச் சென்றனர். இந்தத் தகவல் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர் மூலம் சந்தோஷின் மனைவி பிரியாவுக்கு தெரியவந்தது. அதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர், பிரியா, வடபழனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கடத்தல் கும்பலை போலீஸார் தேடிவந்தனர்.

செல்போன் சிக்னல் மூலம் சந்தோஷ் இருக்கும் இடத்தை போலீஸார் கண்டறிந்து அங்குச் சென்றனர். பின்னர் அவரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். சந்தோஷ் அளித்த தகவலின்படி அவரைக் கடத்திய குற்றத்துக்காக வடபழனியைச் சேர்ந்த கந்தன், அம்பத்தூரைச் சேர்ந்த ராஜேஷ் (43), கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சசிகுமார் (38) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவை போலீஸார் பறிமுதல் செய்தனர். சந்தோஷ் கடத்தல் குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து வடபழனி போலீஸார் கூறுகையில், “பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்தக் கடத்தல் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. அதனால் சம்பவத்தன்று டிரைவர் சந்தோஷை கடத்திய இந்தக் கும்பல் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறது. ஆட்டோவில் எழும்பூர் பகுதிக்கு கடத்திச் சென்றபோதுதான் செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்து சந்தோஷை மீட்டோம். கைது செய்யப்பட்ட ராஜேஷ், திருவான்மியூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. தொடர்ந்து கடத்தல் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். இந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் பிரபல ரௌடி ஒருவரின் தலையீடு இருப்பதும் தெரியவந்திருக்கிறது” என்றனர்.