தூத்துக்குடி: உணவு கிடைக்காமல் தவித்த மக்கள்… கனிமொழி எம்.பி-யின் வாகனம் முற்றுகை! – என்ன நடந்தது?

தூத்துக்குடி மாநகராட்சியின் டி.எம்.பி காலனி பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்ததில், அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தரைதளத்தில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் இடுப்பளவுக்கு தேங்கி நின்றதில், பாதிப்படைந்த மக்கள் அனைவரும் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசியல் கட்சியினர் சார்பில் உணவு கொடுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இன்று காலை உணவுக்குப் பின்பு, முகாமில் உள்ள மக்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், பால், பிஸ்கட் உட்பட எதுவும் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

வாக்குவாதம்

இது குறித்து அரசியல் கட்சியினருக்குத் தகவல் தெரிவித்தும், யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டி.எம்.பி. காலனியில் இருந்து மூட்டு அளவு வெள்ளம் தேங்கிய சாலைகளின் வழியாக நடந்தே வந்த 100-க்கும் மேற்பட்டோர், திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் போக்குவரத்து தடைபட்டு, இரண்டு புறங்களிலும் மீட்புப் பணிக்குச் சென்ற வாகனங்கள் உட்பட பஸ், லாரி என அனைத்தும் வரிசைக்கட்டி நின்றன. அப்போது அந்த வழியாக, கனிமொழி எம்.பி ஆய்வுக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் கனிமொழி எம்.பி-யின் வாகனத்தை இடைமறித்து முற்றுகையிட்டனர்.

சமாதான முயற்சி

அப்போது மக்களைச் சந்தித்துப் பேசிய எம்.பி., “உங்கள் கோரிக்கைகள் எதுவானாலும் நிறைவேற்றி தருகிறேன். அதற்கு முதலில் என்னை இங்கிருந்து அனுப்ப வேண்டும். அதைப்புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான உணவு, பால் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறேன்” என உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானம் அடைந்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இரண்டு பேரை தன்னுடன் அழைத்துச் சென்ற கனிமொழி எம்.பி., மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரியப்படுத்தி டி.எம்.பி காலனி பகுதியில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான உணவு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.