புதுடில்லி:பணம் பறிப்பதற்காக 7 வயது சிறுவனை கடத்திய, அவனுடைய தாய் மாமா உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய டில்லி இந்தர்புரியைச் சேர்ந்தவர் விகாஸ், 25. இவரது நண்பர் கள் பழைய ராஜேந்திர நகரைச் சேர்ந்த தீபக், 25, சிவம் பால், 27.
நெருங்கிய நண்பர்களான மூவரும் மது உள்ளிட்ட போதைப் பழக்கத்துக்கு அடிமையாகினர். இதனால் செலவுக்கு பணம் இன்றி தவிக்கும்போது சிறு குற்றங்களை செய்து வந்துள்ளனர்.
நேற்று முன்தினம், விகாஸின் சகோதரி மகனான, 7 வயது சிறுவனை கடத்தி, பழைய ராஜேந்திர நகரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். பின், சிறுவனின் தந்தைக்கு போன் செய்து 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் சிறுவனை விடுவிப்பதாக மிரட்டினர்.
அவர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவருடைய மொபைல் போனுக்கு வந்த எண்ணை வைத்து விசாரணையைத் துவக்கிய போலீசார், பழைய ராஜேந்திர நகரில் பதுங்கி இருந்த தீபக், சிவம் பால் ஆகிய இருவரையும் கைது செய்து சிறுவனை மீட்டனர். இருவரிடமும் நடத்திய விசாரணை அடிப்படையில் இந்தர்புரி வீட்டில் இருந்த விகாஸையும் கைது செய்தனர்.
மூவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement