சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக 21-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 22-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
நெல்லையில் 5 செ.மீ: 20-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 5 செமீ, நாலுமுக்கு, காக்காச்சி பகுதிகளில் தலா 4 செமீ, மாஞ்சோலையில் 3 செமீ, ராமநாதபுரம் ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய இடங்களில் தலா 2 செமீ, தங்கச்சிமடம், பாம்பன், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், மயிலாடுதுறை மாவட்டம் கோடியக்கரை ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தெற்கு குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.