
‛கம்மட்டிப்பாடம்' வில்லனுக்கு தமிழில் குவியும் வாய்ப்புகள்
மலையாளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் கம்மட்டிப்பாடம் என்கிற படம் வெளியானது. இயக்குனர் ராஜீவ் ரவி இயக்கிய இந்த படம் நிறைய விருதுகளையும் பெற்றது. குறிப்பாக ஜெயிலர் பட வில்லனான விநாயகனின் நடிப்புத்திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. அதேசமயம் அந்த படத்திலேயே ஜேடி காசா என்கிற ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஓரளவு அடையாளம் பெற்றவர் அஷ்ரப் மல்லிசேரி. அந்த படத்தில் கிடைத்த அறிமுகத்துடன் அப்படியே சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டார். சில வருட போராட்டத்திற்கு பிறகு அருண் மாதேஸ்வரனின் ராக்கி, சாணிக்காயிதம் படங்களில் தொடர்ந்து முக்கியமான கதாபாத்திரங்களை நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுளக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸின் தந்தையாக நடித்திருந்தவர் இவர் தான். இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்துவிட்டு இயக்குனர் எழில் தற்போது தான் இயக்கி வரும் படத்தில் இவரை வில்லனுக்கு முற்றிலும் நேர்மாறான காமெடி கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்ல அருண் மாதேஸ்வரன் டைரக்ஷனில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஷ்ரப் மல்லி சேரி மலையாளத்தை விட தமிழில் நல்ல கதாபாத்திரங்களும் நல்ல சம்பளமும் கிடைக்கிறது என்கிறார்.