புதுடெல்லி: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான மாநில பொறுப்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில் உத்தரபிரதேச மாநிலத்தின் பொறுப்பாளராக இருந்து வந்த பிரியங்கா காந்தி தற்போது அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 4 மாநிலங்களில் தோல்வி அடைந்தது. தெலங்கானாவில் மட்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான பணிகளில், காங்கிரஸ் தலைமை தற்போது தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (டிச.23) டெல்லியில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் தேசியத் தலைவர் கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்துக்குப் பிறகு 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான மாநில பொறுப்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
அதில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக சச்சின் பைலட்டும், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக ரமேஷ் சென்னிதாலாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு கூடுதல் பொறுப்பாளராக அஜோய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தின் பொறுப்பாளராக முகுல் வாஸ்னிக் நியமிக்கப்பட்டுள்ளார். ஜிதேந்திர சிங் அசாம் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் பொறுப்பாளராக இருந்து வந்த பிரியங்கா காந்தி தற்போது அதிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதில் அவினாஷ் பாண்டே புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரியங்கா காந்திக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. கேரளா, லட்சத்தீவு மற்றும் தெலங்கானா மாநிலங்களின் பொறுப்பாளராக தீபா தாஸ் முன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
Congress President Shri @kharge has assigned the organisational responsibilities to the following persons with immediate effect. pic.twitter.com/qWhwiJzysj
— Congress (@INCIndia) December 23, 2023