பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த பாஜக ஆட்சியின்போது கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் முதல்வர் சித்தராமையா நேற்று முன் தினம், ‘‘உணவு, உடை ஆகியவை அவரவர் தனிப்பட்ட விருப்பம். இதில் மற்றவர்கள் தலையிட முடியாது. ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல தடை எதுவும் இல்லை. அதனை ஏன் எதிர்க்க வேண்டும். ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளேன்”என்றார்.
இதற்கு முஸ்லிம் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேவேளையில் பாஜக, பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏபிவிபி மாணவ அமைப்பினர் இதனை கண்டித்து கர்நாடக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக பாஜகதலைவர் விஜயேந்திரா, ‘‘மாணவர்களை மத அடிப்படையில் பிரிக்கும் வகையில் சித்தராமையா முடிவெடுத்துள்ளார். அவரதுஇந்த முடிவு கல்வி நிலையங்களில் மதவாதம் நுழைய வழிவகை செய்துள்ளது. தங்களின்அரசியலுக்கு காங்கிரஸார் முஸ்லிம்களை பயன்படுத்தக் கூடாது. கர்நாடக உயர்நீதிமன்றம் உறுதி செய்த உத்தரவை ரத்து செய்யும் சித்தராமையாவுக்கு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்” என்றார்.
இந்நிலையில் நேற்று முதல்வர் சித்தராமையா, ‘‘ஹிஜாப் மீதான தடையை ரத்து செய்வீர்களா? என கேள்வி எழுப்பினர். அதனால் அவ்வாறு பதிலளித்தேன். ஆனால்இன்னும் ஹிஜாப் மீதான தடையைநீக்கவில்லை. அந்த விவகாரத்தில்இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்று விளக்கம் அளித்தார்.