ரோஹித்துக்கு ஜோடி இவரே… ஆனால் அவரிடம் பெருசா எதிர்பாக்காதீங்க – கம்பீர் சொல்லும் விஷயம் என்ன?

India National Cricket Team: இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் நிறைவடைந்த நிலையில், டெஸ்ட் தொடர் வரும் செவ்வாய்கிழமை (டிச. 26) தொடங்க உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (IND vs SA Test Series), முதல் போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் டிச. 26ஆம் தேதி தொடங்கி டிச.30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜன.3ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்த தொடருக்கான இந்திய அணி (Team India) ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ருத்ராஜ் கெய்க்வாட் வலதுகை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்பட்டார். டெஸ்ட் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் ஷமியும் காயம் காரணமாக விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் (IND vs SA Playing XI) குறித்து பல்வேறு கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதிலும், இந்திய அணிக்கு ஓப்பனிங்கில் ரோஹித் சர்மாவுடன் இறங்கப்போவது யார் என்பது தற்போது பெரும் கேள்வியாக உள்ளது. 

பேட்டிங் ஆர்டரை பார்த்தால், ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஜடேஜா, அஸ்வின், ஷர்துல் தாக்கூர் என எட்டாவது வீரர் வரை பேட்டிங் வலிமையாக உள்ளது. இதில், வலது – இடது காம்பினேஷனுக்காக ரோஹித் சர்மா உடன் ஜெய்ஸ்வால்தான் களமிறங்குவார் என தெரிகிறது. அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஜெய்ஸ்வால் குறித்து தெரிவித்த கருத்து முக்கியமான ஒன்றாகும். 

“தென்னாப்பிரிக்காவில் மேற்கிந்திய துணைக் கண்ட வகை ஆடுகளங்கள் இருப்பதால் மிகவும் வித்தியாசமான சவால் காத்திருக்கும். வேகப்பந்துவீச்சு தாக்குதல் மற்றும் சூழல்கள் அப்படியிருக்கும். இங்கே நீங்கள் மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி அல்லது நான்ட்ரே பர்கர் ஆகியோரை எதிர்கொள்ளும் பவுன்ஸ் இருக்கும்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) முன் மற்றும் பின் கால் இரண்டிலும் ஆட்டத்தை வைத்துள்ளார். ஆனால் இது மிகவும் வித்தியாசமான சவாலாக இருக்கும். இந்த அனுபவத்தின் மூலம் அவர் சிறப்பாக வருவார் என நம்புகிறேன். ஒரு இளம் வீரர் வந்து முதல் போட்டியில் சதம் அடிப்பார் அல்லது இரட்டை சதம் அடிப்பார் என்று அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்.

அவர் சதமும் அடிக்கலாம், ஆனால் அவர் 25-30 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு தொடக்கம் கொடுத்தால், அவர் சிறந்த வீரராக நாடு திரும்புவார். அது யஷஸ்வி ஜெய்ஸ்வால் என்றில்லை சுப்மான் கில் (Shubman Gill) அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

10-15 ஆண்டுகளுக்கு முன்பு, தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவுக்கு முதல் சுற்றுப்பயணத்திற்குச் செல்லும் போது, நாங்கள் வீரர்களை இவ்வளவு ஆய்வு செய்ததில்லை. ஒரு இளம் வீரர் தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவுக்கு இப்போது முதல்முறையாகச் சென்றால், அவர் இந்தியாவில் ரன் குவிக்கவில்லை என்றால் அவர் எதிர்கொள்ளும் விமர்சனங்களை அங்கும் எதிர்கொள்கிறார்” என்றார். இதன்மூலம், ஜெய்ஸ்வாலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொடராக இந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.