கர்நாடகாவில் 25 அடி உயரத்தில் நிற்கும் கரும்புகளை பலரும் ஆச்சர்யமாக பார்த்துச் செல்கின்றனர்.
கர்நாடகா மாநிலம், விஜயபுரா மாவட்டம், நிடகுண்டி தாலுகாவில் அமைத்துள்ளது, கோலசங்கி கிராமம். அந்த பகுதியில் விவசாய நிலத்தை கொண்டிருப்பவர்கள் நாராயண் சலுங்கே மற்றும் அவரது சகோதரர் சித்துபா. இவர்களின் நிலத்தில் தான் 25 அடி உயரத்தில் கரும்புகள் வளர்ந்து நிற்கின்றன.

சாதாரணமாகக் கரும்புகள் 8 முதல் 12 அடி வரை மட்டுமே வளரும். ஆனால், இவர்கள் இஸ்ரேலிய தொழில்நுட்பத்தை பின்பற்றி கரும்பை பயிரிட்டுள்ளனர்.
இதனால் 5 ஏக்கர் நிலத்தில் 686 டன்களை அறுவடை செய்துள்ளனர். கரும்பின் உயரமும் 25 அடி வரை வளர்ந்துள்ளது. சாதாரண கரும்பு சுமார் 2-3 கிலோ எடையுடன் இருக்கும் நிலையில், இவர்கள் வளர்த்துள்ள கரும்பு 3.5 முதல் 4 கிலோ எடையோடு உள்ளது.
பலருக்கும் இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழலாம். இந்த சகோதரர்கள் கரும்பை பயிரிடுவதற்கு முன்பு நிபுணர்களின் அறிவுரையை கேட்டுள்ளனர். அதோடு வேளாண் விஞ்ஞானிகளிடம் நிலம் மற்றும் அதில் என்ன வளர்க்கலாம் என்பதையும் கேட்டு அறிந்துள்ளனர்.
விஞ்ஞானிகளின் பரிந்துரை பேரில் SNK 13374 ரக கரும்புகளை விளைவித்துள்ளனர். சொட்டு நீர் பாசன முறையில் பாசனம் செய்துள்ளனர். இதற்காக இயற்கை உரங்களை பயன்படுத்தி கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

வளர்ந்து நின்ற கரும்புகளை சாயாமல் இருக்க செய்ய வேண்டிய முறைகள் குறித்தும், அதைப் பயிர் செய்யும் முறை குறித்தும் கரும்பு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர் இந்த சகோதரர்கள்.
“குறைந்தபட்ச முதலீட்டில் லாபம் ஈட்ட அதிக விவசாயிகள் புதிய விவசாய தொழில்நுட்பத்தைப் பின்பற்ற வேண்டும்” என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர். விதைக்கும் நேரமும், ரகத் தேர்வும் சரியாக இருந்தால் இந்த விளைச்சல் சாத்தியமே. கர்நாடக கரும்பு விவசாயிகள் எஸ்.என்.கே ரகத்தை விரும்பி சாகுபடி செய்து வருகின்றனர் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
பயிர்கள் நன்றாக வளர நீங்கள் பயன்படுத்தும் யுக்திகள் என்ன?! கமென்டில் சொல்லுங்கள்!