அரசியலுக்கு வாங்க அஜித் ; அல்போன்ஸ் புத்ரன் அடுத்த அதிரடி

மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் பற்றி தமிழ் ரசிகர்களுக்கு பெரிய அளவில் விளக்க தேவையில்லை. தற்போது தமிழில் இளையராஜா இசையில் கிப்ட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அதிர்ச்சி அளித்தார்.

இந்த நிலையில் சமீப நாட்களாக அவரது சோசியல் மீடியா பதிவுகள் மிகப்பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் நடிகர் விஜயகாந்த்தின் மறைவை முன்னிட்டு அவர் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில் ஏற்கனவே ஜெயலலிதா, கலைஞர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.. இப்போது விஜயகாந்த் கொல்லப்பட்டுள்ளார்.. இதன் பின்னணியில் உள்ள உண்மைகளை உதயநிதி ஸ்டாலின் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்ல நடிகர் கமலையும் முதல்வர் ஸ்டாலினையும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கொல்ல முயற்சி நடந்தது என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியதோடு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தினார்.

இது இத்துடன் நிற்கவில்லை. அடுத்ததாக நேற்று வெளியிட்ட சோசியல் மீடியா பதிவில் அஜித் சார் நீங்க அரசியலுக்கு வாங்க.. இதுதான் சரியான நேரம் என்று ஒரு பதிவை வெளியிட்டு இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த பதிவில் அவர் கூறும்போது, “அஜித் குமார் சார்.. இது உங்களுக்காக.. நிவின் பாலி மற்றும் சுரேஷ் சந்திரா மூலமாக நீங்கள் அரசியலுக்குள் நுழைய விரும்பியதாக நான் கேள்விப்பட்டேன். பிரேமம் படத்தில் நடித்த நிவின்பாலியின் நடிப்பை உங்கள் மகள் மிகவும் ரசித்ததால் நீங்கள் நிவின்பாலியை உங்கள் இல்லத்திற்கு அழைத்து பாராட்டிய சமயத்தில் அவருடன் இதுகுறித்து பேசியதாக அறிந்தேன். ஆனால் இப்போது வரை நீங்கள் பொதுவெளியிலோ அரசியல் ரீதியாகவோ இன்னும் முன்னால் வரவில்லை.

ஒருவேளை என்னிடம் அவர்கள் பொய் சொல்லி இருக்கலாம்.. அல்லது நீங்கள் அதை மறந்து இருக்கலாம். அல்லது உங்களுக்கு எதிராக யாரோ ஒருவர் இருக்கலாம். மேலே சொன்ன இந்த மூன்றுமே இல்லை என்றால் எனக்கு உங்களிடம் இருந்து பொதுவெளியில் ஒரு கடிதம் மூலமாக விளக்கம் தேவை. ஏனென்றால் நான் மட்டுமல்ல மக்களும் உங்களை நம்புகிறார்கள்” என்று அதில் கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன். இது மட்டுமல்ல அவர் தனது பதிவுகளில் கமெண்ட் செய்யும் நெட்டிசனிடம் கூட பேசக்கூடாத வார்த்தைகளில் திட்டி பதில் கமெண்ட் பதிவிட்டு வருகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இவரது தொடர் பதிவுகளையும் கமெண்ட்டுகளையும் பார்க்கும்போது யாரோ இவருடைய சோசியல் மீடியா அக்கவுண்டை ஹேக் செய்திருக்க வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் அல்போன்ஸ் புத்ரன் தற்போது சற்று மனநிலை குழம்பிய நிலையில் இருக்கிறார், அவருக்கு நல்ல மனோதத்துவ மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் யாராவது இவரது பதிவுகள் இன்னும் விபரீதமாக செல்வதற்குள் அதை தடுத்து இதற்கு ஒரு நல்ல முடிவு காண வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.