விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, 3 கிலோமீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, 5 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி, 7 கிலோமீட்டருக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி என மாவட்டம் முழுவதும் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். நிதி மற்றும் மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
அப்போது அமைச்சர் பேசுகையில்: தமிழக அரசின் நடவடிக்கைகளால் பெண் கல்வி மற்றும் உயர்கல்வியில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. கல்வி, அரசு நிர்வாகம், ஆட்சித்துறை, விஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனையாளர்களாக முன்னேறி உள்ளனர். இது கல்வியால் மட்டுமே சாத்தியமான ஒன்று.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, 3 கிலோமீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, 5 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி, 7 கிலோமீட்டருக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி என்று மாவட்டம் முழுமைக்கும் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் உயர் கல்வியில் புரட்சி ஏற்படும். திருச்சுழி தொகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேசுகையில், இந்தியாவிலேயே விருதுநகர் மாவட்டத்தில் தான் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 97 சதவிகிதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். பொருளாதார பிரச்சினையால் மாணவர்களின் உயர்கல்வி கனவு சிதைந்து விடக்கூடாது என்பதற்காக, தேவைப்படும் மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி கல்விக்கு செலவிடப்படுகிறது. இந்த கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களும் 100 சதவிகிதம் உயர்கல்விக்கு போக வேண்டும் என்ற இலக்குடன் பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு கொண்டிருக்கிறது, என்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வளர்மதி, மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.