விஜயகாந்த் நினைவிடத்தில், கார்த்தி, சிவகுமார் கண்ணீர் அஞ்சலி

தமிழ் சினிமாவின் மூத்த ஹீரோவும், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால், பல முன்னணி நடிகர்கள், நடிகைகள், நடிகர் சங்க நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தவில்லை. நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாசர் மட்டுமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் சங்க செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து இன்று திரும்பிய கார்த்தி, அவரது அப்பா நடிகர் சிவகுமாருடன் சென்று சென்னை, கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “விஜயகாந்த் அவர்கள் இன்று நம்முடன் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செய்ய முடியவில்லை என்பது வாழ்நாள் முழுக்க ஒரு குறையாகவே இருக்கும். கேப்டனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்ததில்லை. கேப்டனுடைய படங்கள் ரொம்பப் பிடிக்கும். அவர் போலீஸாக நடித்தால், கண்டிப்பாக 10 முறையாவது பார்ப்போம்.

நடிகர் சங்கத் தேர்தலில் ஜெயித்தவுடன் அவரை சந்தித்துப் பேசும்போது, ரொம்ப சந்தோஷமாக பேசினார். அது தான் அவருடன் நன்றாக பேசிய தருணம். நடிகர் சங்கத்தில் பெரிய சவால்களை சந்திக்கும் போதெல்லாம் அவரை நினைத்துக் கொள்வோம். தலைவர் என்றால் முன்னின்று வழிநடத்தி, இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதை அவரைப் பார்த்துத்தான் கற்றுக் கொண்டோம். அனைத்து பிரச்னைகளுக்கும் முன்னின்று வேலை செய்திருக்கிறார் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
பெரிய ஆளுமை இன்று நம்முடன் இல்லை என்பது பெரிய வருத்தம். எப்போதும் அவர் இல்லை என்ற வருத்தம் இருந்துக் கொண்டே இருக்கும். அவர் எங்களுடைய மனதில் எப்போதும் இருப்பார்.

ஜனவரி 19ம் தேதி நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். அதுமட்டுமன்றி அவர் புகழ் எப்போதும் நிலைப்பது போல், நாங்கள் செய்ய வேண்டியது, நடிகர் சங்கம் செய்ய வேண்டியது, அரசுக்கு வைக்க வேண்டிய கோரிக்கைகள் என அனைத்துமே அதில் சொல்வோம்.
கேப்டனின் புகழ் எப்போதும் இருக்க வேண்டும். அவர் நிறைய அன்பு கொடுத்துள்ளார். அந்த அன்பு எப்போதும் தமிழ்நாடு முழுக்க பரவிக் கொண்டே இருக்கும் என நம்புகிறேன். அவருடைய குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.