“எதிர்க்கட்சித் தலைவர்களை அவமதிக்கிறது மத்திய அரசு” – கேஜ்ரிவால் விவகாரத்தில் அகிலேஷ் காட்டம்

புதுடெல்லி: “மத்திய அரசு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் மீது அழுத்தம் கொடுத்து, அவர்களை அவமானப்படுத்துகிறது” என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் சம்மன் விவகாரம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையின் சம்மன்களுக்கு ஆஜராகாததால் எந்த நேரத்திலும் கைது அவர் செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகரகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஜனவரி 6,7,8 என மூன்று நாட்கள் குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு குஜராத் செல்லும் கேஜ்ரிவால் அங்கு ஆம் ஆத்மி சார்பில் தொழிலாளர் மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தின்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏ சைத்ரா பசவாவையும், அவரது குடும்பத்தினரையும் கேஜ்ரிவால் சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், “கடந்த இரண்டு ஆண்டுகளில் மதுபானக் கொள்கை ஊழல் பற்றி நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இரண்டு வருடங்களில் பாஜகவின் அனைத்து ஏஜென்சிகளும் பல ரெய்டுகளை நடத்தி பலரை கைது செய்தாலும் ஒரு பைசா ஊழலை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில் ஊழல் நடந்திருந்தால், அத்தனை கோடிகளும் எங்கே போயின? பணமெல்லாம் காற்றில் மாயமாகிவிட்டதா?. ஊழல் நடக்கவில்லை என்பதுதான் உண்மை.

மதுபானக் கொள்கை வழக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. மக்களவைத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய முடியாத வகையில் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. பாஜக இப்போது என்னைக் கைது செய்ய விரும்புகிறது. எனது மிக முக்கியமான சொத்து, மூலதனம், பலம் அனைத்துமே எனது நேர்மைதான். ஆனால், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், சட்டவிரோத சம்மன்களை அனுப்புவதன் மூலமும் பாஜக என்னை இழிவுபடுத்த விரும்புகிறது, என் நேர்மையைக் கெடுக்க விரும்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவாலின் சம்மன் விவகாரம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “இது ஒன்றும் புதிதல்ல. மத்திய அரசு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் மீது அழுத்தம் கொடுத்து, அவர்களை அவமானப்படுத்துகிறது. ஏஜென்சிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது நாடு முழுவதும் தெரியும். அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஒவ்வொருவராக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.