உத்தரகாசி: உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா என்ற இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த சுரங்கப் பாதை கடந்த நவம்பர் 12-ம் தேதி திடீரென இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இவர்கள் அனைவரும் 17 நாட்கள் கடும் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.
சில்க்யாரா சுரங்க வாயில் அருகில் பவுக்நாக் தேவ்தா என்ற உள்ளூர் கடவுளின் கோயில் அமைந்திருந்தது. இந்தக் கோயில் கட்டுமானப் பணிக்கு இடையூறாக இருந்ததால், மீண்டும் கட்டித் தருவதாக உள்ளூர் மக்களுக்கு உறுதி அளித்து, நவயுகா கட்டுமான நிறுவனம் அக்கோயிலை அகற்றியது. கோயில் அகற்றப்பட்ட அதே நாளில்தான் சுரங்க விபத்தும் ஏற்பட்டது. எனவே தெய்வத்தின் அதிருப்தி காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இந்நிலையில் உள்ளூர் மக்களுக்கு அளித்த உறுதிமொழிப்படி இடிக்கப்பட்ட கோயிலை நவயுகா கட்டுமான நிறுவனம் மீண்டும் கட்டித்தர உள்ளது.