சென்னை: காலனி ஆதிக்க மனநிலை மாற வேண்டும், பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் அளித்தல், ஒற்றுமையே இலக்காக இருக்க வேண்டும், 140 கோடி மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 திட்டங்களை, 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி முன்வைத்துள்ளார் என்று தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகியது. இந்த 2 நாள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜன.7, 8-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது. மாநாட்டில், சிறப்பு விருந்தினராக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். பின்னர் பேசிய அவர், “செழுமையான வரலாறும், கலாச்சாரமும், இயற்கை அழகும், காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் உள்ளிட்ட சிறப்பான தயாரிப்புகளை உருவாக்கும் தேர்ந்த கைவினைக் கலைஞர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. அதோடு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அழகான கோயில்களையும் கொண்டுள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற உயரிய இலக்குடன் தமிழ்நாடு பயணித்து வருகிறது. இதற்காக, தமிழக அரசு, தொழில் நிறுவனங்கள் மற்றும் தமிழக மக்களை நான் வெகுவாக பாராட்டுகிறேன். ஆதித்யா எல்-1 விண்கலம் சூரிய ஒளி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை நேற்று இந்த நாடே கொண்டாடி பெருமை அடைந்தது. இந்த திட்டத்தின் இயக்குநர் நிகர் ஷாஜி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த அரிய அறிவியல் சாதனைக்காக நான் அனைவரும் எழுந்து நின்று நமது வாழ்த்துகளை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, இந்தியா விண்வெளி ஆய்வில் பல்வேறு சாதனைகளை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுப்பில், ஆதித்யா எல்-1 திட்டத்தின் இயக்குநர் நிகர் ஷாஜி, இஸ்ரோ தலைவர் சோம்நாத் உடன் இந்த நாடே பின்நின்று நிகழ்த்தி வருகிறது. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 நிச்சயமாக இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும். 2047-ம் ஆண்டு நாட்டினுடைய 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, நாட்டின் அனைத்துப் பகுதிகளின் வளர்ச்சியும் பங்களிப்பும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.
பிரதமர் நரேந்திரமோடி 2014-ல் ஆட்சிக்கு வந்தபோது, மாநிலங்கள் வளர்ச்சியடைந்தால், இந்தியா வளர்ச்சி அடையும் என்று கூறினார். ஒவ்வொரு மாநிலமும் நாட்டின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உதவ வேண்டும் என்று கூறினார். 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் பலம் வாய்ந்த தூண்களாக உள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்த தமிழ்நாடு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 18% வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளனர். இந்த இலக்குதான், தொழில்மயமாக்கல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைக் கொடுத்து அவர்களது லட்சியங்களை அடைவதற்கான உத்வேகத்தை அளித்து வருகிறது.
நம் இலக்குகள் பெரிதாக இருந்தால்தான், ஒரு நாடு அதன் லட்சியங்களை அடைய முடியும். இத்தகைய லட்சியங்களைக் கொண்டுள்ள தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழக மக்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி அண்மையில், தமிழகத்தில் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கிவைத்தார். தொழில்மயமாக்கல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் என கடந்த 10 ஆண்டுகளாக, மத்திய அரசு தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
ஜவுளித்துறை அமைச்சராக, 7 மெகா ஜவுளிப் பூங்காக்களைத் தொடங்கியிருக்கிறோம். முதல் ஜவுளிப்பூங்காவை தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் இணந்து தமிழகத்தில்தான் துவக்கப்பட்டது. விரைவில் விருதுநகரில் அது அமையப்போகிறது. பிரதமர் மோடியின் மனதுக்குள் தமிழகத்துக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. அதனால்தான், இந்த நாட்டுக்கான சட்டங்களையும், கொள்கைகளையும் கொண்டுவரும், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பழமையான கலாச்சாரம், பாரம்பரியம் கொண்ட தமிழகத்தின் செங்கோல்தான் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு ஒரு நெருக்கமான பிணைப்பு இருந்து வருகிறது. இந்த கலாச்சார பிணைப்பை போற்றும் வகையில் இரண்டுமுறை காசி தமிழ் சங்கமம் மற்றும் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழாக்கள் கொண்டாடப்பட்டன. நாட்டின் வளர்ச்சிக்கான அதிவிரைவு பாதையில் உயரிய இலக்குடன் தமிழகம் பயணித்து வருகிறது.
பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியா உலகின் வலுவிழந்த பொருளாதாரமாக இருந்து வந்தது. எனவே, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த கடும் சவால்களை எதிர்கொண்டோம். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் உலகின் 5-வது பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியாவில் இளைஞர்கள் உள்பட அனைவரும் தொழில் தொடங்குவதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சியில் மாநிலங்களிடையே ஆரோக்கியமாக போட்டி இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என்பதில் பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார்.
20147-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி 5 திட்டங்களை முன்வைத்துள்ளார். காலனி ஆதிக்க மனநிலை மாற வேண்டும், பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் அளித்தல், ஒற்றுமையே இலக்காக இருக்க வேண்டும், 140 கோடி மக்களும் இணைந்து செயல்பட வேண்டும், தேசத்தின் வளர்ச்சியில் பெண்களின் உழைப்பு பிரதிபலிக்காதது துரதிர்ஷ்டவசமானது” என்று அவர் பேசினார்.