புதுடெல்லி: பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்த மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவை குறித்து அந்நாட்டு அரசிடம் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவு சென்றிருந்தார். சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இது கருதப்பட்டது. தன்னுடைய பயணம் குறித்த அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்த மோடி, “லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது. கற்பதற்கும் வளர்வதற்குமான வாய்ப்புள்ளதாக எனது பயணம் அமைந்தது” என்று தெரிவித்திருந்தார். இந்தநிலையில் பிரதமரின் பயணம் குறித்து மாலத்தீவின் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் துறையின் துணை அமைச்சர் மரியம், பிரதமர் மோடியை ‘கோமாளி’,‘பொம்மை’ என்று விமர்சித்திருந்தார். இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் எழுந்த கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்து பின்னர் அந்தப் பதிவு நீக்கப்பட்டது.
இதனிடையே பிரதமரின் லட்சத்தீவு பயணம் குறித்து அந்நாட்டு அமைச்சர்களின் இழிவான கருத்துகள் குறித்து இந்தியா மாலத்தீவு அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய தூதர் இந்த விவகாரம் குறித்து மாலத்தீவு அரசுக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனிடையே மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத், பிரதமர் மோடி குறித்த மரியம் ஷியுனாவின் தரக்குறைவான கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மாலத்தீவின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கான கருவியாக இருக்கும் முக்கிய கூட்டாளி நாட்டின் பிரதமர் குறித்து மாலத்தீவு அரசின் அமைச்சர் மரியம் ஷியுனா மிகவும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். அதிபராக முகமது முய்சு அரசு இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களில் இருந்து தள்ளியிருக்க வேண்டும் மேலும் இது மாலத்தீவு அரசின் கொள்ளை இல்லை என்று இந்தியாவுக்கு தெளிவு படுத்தவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் மரியம் ஷியுனா பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தார். ஷியுனா தவிர மாலத்தீவு எம்.பி. ஷாகித் ரமீஸ் உள்ளிட்ட மாலத்தீவு அரசு அதிகாரிகள் பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணம் குறித்து கேலி செய்திருந்தனர்.
ரமீஸ் பிரதமர் மோடியின் மாலத்தீவு பயண வீடியோ ஒன்றுடன் என்ன ஒரு சிறந்த நடவடிக்கை இது. இது மாலத்தீவு அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவு, மேலும் இது மாலத்தீவின் சுற்றுலாவை வளர்க்கும் என்ற எக்ஸ் பதிவினை பகிர்ந்துள்ளார். அதில்,”நல்ல நடவடிக்கை தான். என்றாலும் எங்களுடன் போட்டியிடும் எண்ணம் மாயையானது . நாங்கள் கொடுக்கும் சேவைகளை அவர்களால் எவ்வாறு வழங்க முடியும்? அவர்களால் எவ்வாறு துய்மையாக இருக்க முடியும்” என்று தெரிவித்திருந்தார்.
இது நெட்டிசன்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி நிலையில், பலர் மாலத்தீவினை புறக்கணிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர்.
தனிப்பட்ட கருத்துக்கள்: இதனிடையே பிரதமர் மோடிக்கு எதிரான மரியம் ஷியுனாவின் கருத்துக்களை நிராகரித்துள்ள மாலத்தீவு அரசு, இது அரசின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை என்று கூறியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் உயர் பொறுப்பிலுள்ளவர்களைப் பற்றி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இழிவான கருத்துக்கள் குறித்து அரசு அறிந்துள்ளது. அந்தக் கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களே. அது மாலத்தீவு அரசின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை.
கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயக ரீதியிலும், பொறுப்பான முறையிலும், வெறுப்பு, எதிர்மறை பரப்பாத வகையிலும், மாலத்தீவுக்கும் அதன் சர்வதேச கூட்டாளிகளுடனான உறவுகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று அரசு நம்புகிறது. மோடிக்கு எதிராக இழிவான கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாலத்தீவு அரசு தயங்காதுய” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவில் விரிசல்: மாலத்தீவு அதிபராக முகமது முய்சு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கடந்த சில மாதங்களாக இந்தியாவுக்கும் – மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அவர், கடந்த நவம்பர் 2023-ம் ஆண்டு அதிபராக பதவியேற்றார். முன்னதாக, அவர் தனது தேர்தல் வாக்குறுதியில், “மாலத்தீவில் வெளிநாட்டு ராணுவம் இருக்ககூடாது. இந்திய ராணுவக்குழுவை இம்மண்ணிலிருந்து வெளியேற்றுவேன்” எனக் கூறியிருந்தார். இது இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்படத் தொடக்கமாக அமைந்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று திங்கள் கிழமை சீனா செல்கிறார் முய்சு. அவர் அடிப்படையில் சீன ஆதரவு நிலைபாடு கொண்டவர்.
2023 டிசம்பரில் COP28 காலநிலைப் பேச்சுவார்த்தையின்போது துபாயில் பிரதமர் மோடியை முய்சு சந்தித்தார். இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்துவது குறித்து விவாதிக்க ஒரு முக்கிய குழுவை அமைக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.மாலத்தீவில் இருந்து 77 இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு முய்சு இந்தியாவை கேட்டுக்கொண்ட பிறகும், இரு நாடுகளுக்கும் இடையிலான 100 க்கும் மேற்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்யபட்டது.
இதனால் இந்தியா – மாலத்தீவு இடையிலான உறவு அவ்வளவு சுமுகமாக இல்லை. இதன் வெளிப்பாடாக மாலத்தீவு அமைச்சரின் கருத்து பார்க்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் முக்கிய கடல்சார் அண்டை நாடாக மாலத்தீவு உள்ளது குறிப்பிடத்தக்கது.