“தமிழக நிதி அமைச்சர் வரி குறித்த புரிதல் இல்லாமல் பேசி வருகிறார்” – அண்ணாமலை @ தருமபுரி

தருமபுரி: வரி குறித்து தமிழக நிதி அமைச்சர் புரிதல் இல்லாமல் பேசி வருகிறார் என தருமபுரியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 7) ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை தொடங்கினார். பின்னர் பாப்பாரப்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா நினைவு மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரதமாதா ஆலயத்தில் பாரதமாதாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து சுப்ரமணிய அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியது: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் 1923-ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா பாரதமாதா ஆலயம் மற்றும் பாரத அன்னை ஆசிரமம் அமைக்க திட்டமிட்டு ஆறு ஏக்கர் நிலத்தை பல சிரமங்களுக்கு இடையில் வாங்கி தன் பெயரில் பத்திரப் பதிவு செய்தார். சிவாவின் மறைவுக்குப் பிறகு அந்த வளாகத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த வளாகத்தில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த வளாகத்தில் அவரது கனவுப்படி பாரதமாதா ஆலயம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆலயத்துக்கு திமுக அரசு பாரதமாதா நினைவாலயம் என பெயர் சூட்டியுள்ளது. இது வருத்தத்திற்குரியது. பாஜகவிடம் ஒப்படைத்தால் கட்சியின் சொந்த செலவில் சிவா கனவு கண்டபடி பாரதமாதா ஆலயத்தையும் பாரத ஆசிரமத்தையும் அமைத்து, தமிழக அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம்.

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசின் நடவடிக்கைகளால் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாகவே வியட்நாம் போன்ற நாடுகள் இந்தியாவில் தொழில் முதலீடுகளை செய்ய முன்வந்துள்ளன. தற்போது சென்னையில் நடந்து வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் அதிக அளவில் முதலீடுகள் குவிய வாய்ப்புள்ளது.

வரி குறித்து தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு புரிதல் இல்லாமல் பேசி வருகிறார். 1996 முதல் 2014-ம் ஆண்டு வரை மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய வரித்தொகை நிலுவையை பாஜக அரசு தான் வழங்கி முடித்தது. தற்போதும் தமிழகம் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வரி தொகையை விட மத்திய அரசு தமிழகத்துக்கு கொடுத்த தொகை அதிகம். இது புரியாமல் அவர் பேசி வருகிறார்.

மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு ஆகியவற்றை பெறுவதற்கான பயனாளிகளை இறுதி செய்வதில் தமிழக அரசு பல்வேறு குழப்பங்களை செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 2.26 கோடி ரேஷன் அட்டைதாரர்களில் வசதியானவர்கள் நீங்கலாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும் என கூறினார்.

பின்னர் பென்னாகரம், தருமபுரி ஆகிய இடங்களில் நடந்த யாத்திரை நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலை பேசினார். இதில் பாஜக மாநில நிர்வாகிகள் கே.பி.ராமலிங்கம் நரேந்திரன், தருமபுரி மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.