பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்திருக்கிறது.

முன்னதாக, பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸுக்கு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி, விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து, இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், ஜனவரி 6-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதற்கிடையில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை, வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையிலிருந்ததால் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பும் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு இன்று வந்தது.

அதைத் தொடர்ந்து ராஜேஸ் தாஸ் மனுமீது தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் காரணம் போதுமானதாக இல்லை. அதற்கு அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லை” என்று மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், மேல்முறையீட்டு வழக்கின் விசாரணைக்காக ஜனவரி 12-ம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ராஜேஷ் தாஸுக்கு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஜனவரி 18-ம் தேதி இறுதி விசாரணையைத் துவங்கி ஜனவரி 24-ம் தேதிக்குள் அதனை முடிக்க வேண்டும் என விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார்.