தருமபுரி: மருத்துவர்கள் ஆலோசனையின் படி ரத்த அழுத்தத்தை குறைக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவ்வப்போது குறுகிய தூரத்துக்கு நடைபயணம் மேற்கொள்கிறார் என தருமபுரி எம்.பி தெரிவித்துள்ளார்.
தருமபுரி எஸ்.வி சாலையில் அன்னசாகரம் பிரிவு ரோடு பகுதியில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் புதிதாக அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஜன. 9) இரவு நடந்தது. இதில், தருமபுரி மக்களவை உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார் பங்கேற்று கோபுர மின் விளக்கை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருவது நடைபயணமே இல்லை. ரத்த அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றை குறைக்க அவரது மருத்துவர் அவருக்கு ஆலோசனை கூறும் போதெல்லாம் அவ்வப்போது குறுகிய தூரத்துக்கு அவர் நடைபயணம் மேற்கொள்கிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருவது தான் உண்மையான நடைபயணம். ஒவ்வொரு மாவட்டத்துக்கு செல்லும்போதும் கழிப்பறைகள், பிரதமரின் வீடு கட்டும் திட்ட வீடுகள் ஆகியவற்றை பெற்ற பயனாளிகள் குறித்த புள்ளிவிவரங்களை குறிப்பிட்டு பேசி வருகிறார். இவ்வாறான நலத்திட்டங்களுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. மக்களின் வரிப்பணத்தில் தான் இவ்வாறான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தனது சட்டைப் பையில் இருந்து பணம் கொடுக்கவில்லை. மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதி வழங்கி இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தொப்பூர் கணவாய் சாலை சீரமைப்பு, தருமபுரி-மொரப்பூர் இணைப்பு ரயில் பாதை திட்டத்துக்கெல்லாம் மத்திய அரசு தாமாக முன்வந்து நிதி ஒதுக்கவில்லை. தருமபுரி மாவட்ட நடைபயணத்தின்போது, இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு தாமாகவே நிதி ஒதுக்கியதுபோல் பேசிச் சென்றுள்ளார். மக்களவை உறுப்பினர் என்ற வகையில் நான் பலமுறை முயற்சி மேற்கொண்ட பிறகு தான் நிதி ஒதுக்கப்பட்டது. நாங்கள் போராடி கொண்டு வந்த திட்டத்துக்கு பாஜக-வினர் ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கின்றனர். இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியின்போது, தருமபுரி நகராட்சி தலைவர் லட்சுமி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.