? சிறப்புரிமை மீறல் தொடர்பில் விதிக்கப்படக் கூடிய அதியுச்ச தண்டனை…
பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவினால் எவரேனும் உறுப்பினர் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையொன்றில், வெவ்வேறான இரண்டு தவறுகள் அல்லது அதிலும்கூடிய ஒரு எண்ணிக்கைக்காக, ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகள் வெவ்வேறாக குறிப்பிடப்பட்டுள்ளபோது, அத்துடன் சம்பந்தப்பட்ட உறுப்பினர் அத்தகைய குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டுள்ளவிடத்து, காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான 1953 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தின் 28ஆம் பிரிவுக்கு அமைய, விதிக்கப்படக்கூடிய அதியுச்ச தண்டனை பற்றி கௌரவ சட்டத்துறை தலைமை அதிபதியின் அபிப்பிராயம் வினவப்பட்டதோடு அதன்படி, கௌரவ சட்டத்துறை தலைமை அதிபதி அரசியலமைப்பின் 66(ஊ) மற்றும் 67ஆம் உறுப்புரைகள், காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான 1953 ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தின் 22(3), 27 (1) மற்றும் 32ஆம் பிரிவுகள் மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 77(1), 77(2) மற்றும் 77(3) அத்துடன் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டத்தின் 5 மற்றும் 16 (1) ஆம் பிரிவுகளைக் கருத்திற் கொண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 66(ஊ) உறுப்புரையின் கீழ், 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டத்தின் 5 மற்றும் 16 (1) ஆம் பிரிவுகளின் ஏற்பாடுகளைப் பின்பற்றி தண்டனை விதிக்கப்படலாமென அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிகழ்வு ஒன்றுக்காக குற்றப்பத்திரிகையில் வெவ்வேறான இரண்டு தவறுகள் அல்லது அதிலும் கூடிய ஒரு எண்ணிக்கைக்கு, உறுப்பினர் ஒருவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தின் 28 ஆம் பிரிவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சேவை இடைநிறுத்தமானது ஒரு மாதத்தை விஞ்சிய ஒரு காலப்பகுதிக்காக, அரசியலமைப்பின் 66(ஊ) உறுப்புரைக்கு அமைய மூன்று மாதகால உச்ச வரம்பிற்கு உட்பட்டதாக விதிக்கப்படலாமென அவதானிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அவேர்தன அறிவித்தார்.
? புதிய பாராளுமன்ற ஒன்றியங்களை அமைப்பதற்கு நடவடிக்கை
2023 டிசம்பர் 12ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற ஒன்றியங்கள் இரண்டை அமைப்பது தொடர்பில் அனுமதி கிடைக்கப்பெற்றிருப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண மற்றும் மேலும் 09 பாராளுமன்ற உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ‘இலங்கை மருத்துவ பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்’ (Caucus of Medical Parliamentarians Sri Lanka) அமைப்பதற்கும், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இரான் விக்ரமரத்ன மற்றும் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய ‘இலங்கை காலநிலை பாராளுமன்ற ஒன்றியம்’ (Climate Parliament of Sri Lanka) அமைப்பதற்கும் அனுமதி கிடைத்துள்ளது.