“நிவாரணம் வேண்டும்" மழைக்கு பொங்கல் கரும்புகளை பறிகொடுத்த விவசாயிகள் கண்ணீர்!

திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த ஜனவரி 9-ம் தேதி, காலை 7 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், பழனி, வடமதுரரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மதியம் 2.30 மணி வரை பெய்த மழையின் அளவு மட்டும் 39.2 சென்டி மீட்டராக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல், பழனி நகர் பகுதியில் மட்டும் தலா 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஏற்கெனவே வைகை அணை முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறிவரும் நிலையில், நிலக்கோட்டை, வத்தலகுண்டு வழியாக செல்லும் வைகை ஆற்றில் மழைநீர் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

செட்டிநாயக்கன்பட்டியில் மழைக்கு சாய்ந்த கரும்பு

இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சிலஇடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான கரும்புகள் சாய்ந்து நாசமடைந்துள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி, விவசாயிகள் அதிகபரப்பில் கரும்பு பயிரிடுவது வழக்கம். நிகழாண்டும் அதேபோல ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்தது. மிதமான மழை பெய்து வந்த நிலையில் ஜனவரி 9ம் தேதி காலை முதல் தொடர்ந்து 4 மணி கனமழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் சாய்ந்தன.

விவசாயி கணேசன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய திண்டுக்கல் செட்டிநாயகன்பட்டியைச் சேர்ந்த கரும்பு விவசாயி கணேசன், “மூன்று தலைமுறைகளாக கரும்பு விவசாயம் செய்து வருகிறோம். சில ஆண்டுகளுக்கு முன் ஏக்கர் கணக்கில் கரும்பு விவசாயம் செய்து வந்தேன். படிப்படியாக குறைந்து நிகழாண்டில் 70 சென்ட் அளவுக்கு மட்டும் கரும்பு போட்டிருந்தேன். விவசாயம் செய்ய தேவையான உரம் விலை உயர்ந்துள்ளது. அதேபோல் விவசாய கூலியும் உயர்ந்து உள்ளது. கூலி வேலைக்கு ஆட்களும் கிடைப்பதில்லை. ஆனால் கரும்பின் விலை மட்டும் 15 ஆண்டுகளாக ஒரே விலையில் தான் உள்ளது.

மேலும் எறும்பு, அணில், மயில் உள்ளிட்டவைகளிடமிருந்து கரும்பு கட்டையை காப்பாற்றி கொண்டு வருவதற்கு போதும் போதும் என ஆகிவிடுகிறது. இவ்வளவு சிரமங்களையும் தாண்டி பயிரிட்டு அறுவடை செய்து விலை மட்டும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். பொங்கல் பரிசுக்காக தமிழ்நாடு கூட்டுறவு துறை மூலம் கரும்பு கொள்முதல் செய்கிறது.

அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு

ஆனால், அந்த விலை குறைவாகவே உள்ளது. இருப்பினும் நல்ல விளைச்சல் கிடைத்தால் நஷ்டமில்லாமல் அறுவடையை சிறப்பாக நடத்தி விடலாம் என்றிருந்தோம். ஆனால் கனமழையால் கரும்புகள் சாய்ந்து எங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே தமிழக அரசு தங்களுக்கு தகுந்த நிவாரணம் தொகை அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.