வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டாக்கா : வங்கதேச நாட்டின் பிரதமராக, ஐந்தாவது முறையாக அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா, 76, நேற்று பதவியேற்றார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இடைக்கால அரசின் தலைமையில் தேர்தல் நடத்த வேண்டும் என முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தியது.
இது தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்படாததை அடுத்து, கடந்த 7ம் தேதி நடந்த பொது தேர்தலை அக்கட்சியும், அவர்களின் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன.
இதில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் மற்றும் சுயேட்சைகள் போட்டியிட்டன. மொத்தமுள்ள 300 இடங்களில் 223 இடங்களில் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், ஐந்தாவது முறையாக நேற்று அவர் பிரதமராக பதவியேற்று கொண்டார். அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு அதிபர் ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து, ஷேக் ஹசீனா தலைமையிலான புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்றுக் கொண்டது. இதில், 25 கேபினட் அமைச்சர்களும், 11 இணையமைச்சர்களும் பதவியேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement