மும்பையில் பிரதமர் மோடி திறந்து வைத்த நாட்டின் நீளமான கடல் பாலம் – முக்கிய அம்சங்கள் என்னென்ன?

புதுடெல்லி: நாட்டின் நீளமான மும்பை டிரான்ஸ் துறைமுக இணைப்பு கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். இந்தப் பாலத்துக்கு அடல் பிகாரி வாஜ்பாய் செவ்ரி – நவ சேவ் அடல் சேது எனப் பெயரிடப்பட்டுள்ளது. தெற்கு மும்பையை நவி மும்பையுடன் இணைக்கும் இந்தப் பாலத்தின் மூலமாக இரண்டு மணி நேரப் பயணம் இனி 15 – 20 நிமிடமாக குறைக்கப்படும்.

சுமார் 21.8 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாலம் ரூ.17,840 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்துக்கான வேலைகளை கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கட்டுமானப் பணிகள் கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்து வந்தன. இந்தப் பாலம் மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கும், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும். அதேபோல், மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவுக்கான பயண நேரத்தையும் குறைக்கும். கூடுதலாக மும்பை துறைமுகத்துக்கும் ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கும் இடையிலான இணைப்பையும் இப்பாலம் மேம்படுத்துகிறது.

ஆறு வழி கடல் இணைப்பாக இருக்கும் இந்த மும்பை டிரான்ஸ் துறைமுக இணைப்பு பாலம் சுமார் 16.50 கிலோ மீட்டர் கடலிலும், 5.50 மீட்டர் நிலத்திலும் கட்டப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, டிராக்டர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தில் நான்கு சக்கர வாகனங்கள் 100 கி.மீ. வேகத்தில் செல்லலாம். பாலத்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் உச்ச வேக வரம்பு 40 கி.மீ. ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜன.4-ம் தேதி மகாராஷ்டிரா அரசு இந்தப் பாலத்தில் ஒரு வழியில் பயணம் செய்வதற்கு காருக்கு ரூ.250 சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தது. பாலத்தில் ஒரு முறை சென்று வர காருக்கு ரூ.375 கட்டணம் வசூலிக்கப்படும். தினசரி மற்றும் மாதாந்திர பாஸ்கள் முறையே ரூ.625 மற்றும் ரூ.12,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தானியங்கி சுங்க வசூல் மற்றும் சிறந்த போக்குவரத்து அமைப்பு போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளை உள்ளடக்கியுள்ள இந்தப் பாலம் இந்தியாவிலேயே முதல்முறையாக ஆர்தோட்ரோபிக் ஸ்டீல் டெக் ஸ்பேன்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது கப்பல் வழித்தடங்களை தடுக்கும் தூண்களுக்கான தேவையில்லாம் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு துணை புரிகிறது. மேலும் இந்தப் பாலத்தில் உள்ளூர் வன உயிரிகளைக் பாதுகாக்கும் வகையில் ஒலி மற்றும் ஒளித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.