ராஜபாளையம்: ராஜபாளையம் காவலர் குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை ஆய்வு செய்தபோது விஷவாயு தாக்கியதில் ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
ராஜபாளையம் நகராட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தில் ரூ.258.25 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. நகராட்சியில் உள்ள 42 வார்டுகள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனியாக கழிவு நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டது. இதில் வீடுகளில் கழிவு நீர் சேகரிப்பு இணைப்பு, கழிவு நீர் உந்து குழாய்கள் பொருத்தப்பட்டு, அனைத்து தெருக்களிலும் குழாய்கள் பதிக்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு பகுதியாக பாதாள சாக்கடை இணைப்பு வழங்கி சோதனை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் ராஜபாளையம் ரயில் நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொறியாளர் கோவிந்தன் சுகுமார் (35) மற்றும் பணியாளர் ஜான் பீட்டர் (32) ஆகிய இருவரும் வழக்கமான ஆய்வு பணியில் ஈடுபட்டனர். காவலர் குடியிருப்பு முன் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோலை திறந்த போது, ஜான் பீட்டர் விஷவாயு தாக்கி பாதாள சாக்கடை உள்ளே விழுந்துள்ளார். அப்போது அருகே நின்ற கோவிந்தன் சுகுமாரும் விஷவாயு தாக்கி பாதாள சாக்கடைக்குள் விழுந்தார்.
தகவலறிந்து வந்த ராஜபாளையம் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் இருவரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.