2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயப் பிராணப் பிரதிஷ்டை நடைபெற உள்ளது. தேசமெங்கும் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தப் புனித விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விரதங்களை மேற்கொண்டு வருகிறார். இதற்காக இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்று ஸ்ரீராமர் சம்பந்தமான ஆன்மிக நிகழ்வுகளிலும் கலந்து கொள்கிறார். அதன் தொடர்ச்சியாக வரும் 19-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்களுக்கும் செல்லவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அநேகமாக 19-ம் தேதி இரவு ராமேஸ்வரம் அல்லது ராமநாதபுரத்தில் இரவு தங்கும் பிரதமர் ஜனவரி 20-ம் தேதி அதிகாலை ராமேஸ்வரத்தில் உள்ள 23 புனிதத் தீர்த்தங்களிலும் நீராடி ஸ்ரீராமநாதரை தரிசிக்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் ராமேஸ்வரத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி 22-ம் தேதி அயோத்தி திருக்கோயில் திறப்பு இருக்கும் நிலையில் பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் நீராடி, புனித நீரை அயோத்திக்குக் கொண்டு செல்வது மிகவும் முக்கியமான செயலாகக் கருதப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக பிரதமரின் வருகை அறிவிக்கப்படாவிட்டாலும் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்பதே அங்குள்ள நிலைமை. ஸ்ரீராமர் தீர்த்தமாடிய தீர்த்தங்களையும் ஸ்ரீராமரால் உருவான தீர்த்தங்களிலும் பிரதமரும் நீராடுவது அயோத்தி ஸ்ரீராமரைப் பின்பற்றியே என்றும் கூறப்படுகிறது.

தொன்மையான ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் ஸ்ரீராமரால் எழுப்பப்பட்டது என்பதை ராமாயணம் கூறுகிறது. சீதையை மீட்க ராவணனைக் கொன்ற ராமர், தனது தோஷத்தைப் போக்க மணலால் ஆன லிங்கப் பிரதிஷ்டை செய்து இங்கு வழிபட்டார். இதனால், இங்குள்ள சுவாமி ராமநாதர் என்றும் தலத்துக்கு ராமேஸ்வரம் என்றும் பெயர் உண்டானதாக ராமாயணம் சொல்கிறது.
காசி – ராமேஸ்வரம் யாத்திரை இந்திய ஒற்றுமைக்கு உதாரணமான விஷயம் என்பார்கள். காசிக்குச் செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் எல்லாத் தீர்த்தங்களிலும் நீராடி, ராமேஸ்வர மணலை எடுத்துச் சென்று, கங்கையில் கரைப்பர். அதேபோல காசியிலிருந்து கங்கைத் தீர்த்தம் கொண்டு வந்து, ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்வர். ராமேஸ்வரத்தில் உள்ள 23 தீர்த்தங்களும் உலகில் உள்ள சகல புனித தீர்த்தங்களைவிடவும் மேன்மையானது என்கிறது தலவரலாறு.

ஆதியில் ராமேஸ்வரக் கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்கள் கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்கள் என 44 புனித தீர்த்தங்கள் இருந்தனவாம். அவை இன்று 23 தீர்த்தங்களாக மாறிவிட்டன. ராமேஸ்வரக் கோயிலுக்கு எதிரே உள்ள அக்னித் தீர்த்தம் தொடங்கி கோயிலுக்குள் உள்ள கோடித் தீர்த்தம்வரை உள்ள 23 தீர்த்தங்களின் மகிமைகளை அறிவோம்.
ராமேஸ்வரத்தில் உள்ள 23 தீர்த்தங்களும் அவற்றின் சிறப்புகளும்:

1. அக்னி தீர்த்தம்: அன்னை சீதாதேவி தன்னுள் புகுந்ததால் குளிர்ந்து போன அக்னி பகவான் தீர்த்தமாகிக் கடலில் சேர்ந்தான். அதனால் ராமேஸ்வரக் கடற்கரையே அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. இங்கு நீராடினால் சகல பாவங்களும் கழிந்து குளிர்ச்சியான வாழ்வைப் பெறலாம் என்பது ஐதிகம்.
2. மகாலட்சுமி தீர்த்தம்: இது கோயிலின் பிரதான வாசலில் அனுமன் சந்நிதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் நீராட சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.
3. சாவித்ரி தீர்த்தம்: இது அனுமன் கோயிலுக்கு மேல்புறம் உள்ளது. இதை அடுத்து காயத்ரி தீர்த்தம் (4), சரஸ்வதி தீர்த்தம் (5) அமைந்துள்ளன. இவற்றில் நீராட கல்வி-கலைகளில் தேர்ச்சி பெறலாம்.

6. சேதுமாதவத் தீர்த்தம்: இதில் நீராட தோஷ நிவர்த்தியும் ஆன்ம பலமும் பெறலாம்.
7. நள தீர்த்தம்: இதில் நீராட கம்பீர தேஜஸை அடையலாம்.
8. நீல தீர்த்தம்: இதில் நீராட அஸ்வமேத் யாகம் செய்த பலனை அடைந்து சொர்க்க லோகம் சேரலாம்.
9. கவாய தீர்த்தம்: இதில் நீராட தேக வலிமை, ஆரோக்கியம் கிடைக்கும்.
10. கவாட்ச தீர்த்தம்: இதில் நீராட மன வலிமை கிடைக்கும்.
11. கந்தமாதனத் தீர்த்தம்: இதில் நீராட தரித்திரம் நீங்கும்.
12. சங்கு தீர்த்தம்: இதில் நீராட நன்றி மறந்த சாபம் நீங்கும்.
13. சக்கர தீர்த்தம்: இதில் நீராட சகல நோய்களும் நீங்கும்.
14. பிரமாத்திர விமோசனத் தீர்த்தம்: இதில் நீராட பிரம்ம ஹத்தி தோஷங்களும், பாவங்களும் நீங்கும்.
15. சூர்ய தீர்த்தம்: இதில் நீராட பித்ரு தோஷம் நிவர்த்தியாகும்.
16. சந்திர தீர்த்தம்: இதில் நீராட மனவியாதிகள் நீங்கும்.
17. கங்கா 18. யமுனா 19. காயத்ரி: இம்மூன்றிலும் நீராட மரண பயம் நீங்கி வாழலாம். மோட்சம் அடையலாம். அச்சத்திலிருந்து விடுபடலாம்.
20. சத்யாம்ருத தீர்த்தம்: இதில் நீராட சகல சாபங்களிலிருந்தும் விடுபடலாம்.

21. சிவ தீர்த்தம்: இதில் நீராட காரிய ஸித்தி கிடைக்கும்.
22. சர்வ தீர்த்தம்: இதில் நீராட சந்தோஷமான வாழ்வைப் பெறலாம்.
23. கோடி தீர்த்தம்: ஸ்ரீராமர் லிங்கப் பிரதிஷ்டை செய்தபோது அபிஷேக நீருக்காகத் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து உருவாக்கிய தீர்த்தமிது. இதுவே இங்குள்ள தீர்த்தங்களில் முதன்மையானது. இந்தத் தீர்த்தத்தில் நீராடியபின் ராமேஸ்வரத்தில் இரவு தங்கக் கூடாது என்பது சம்பிரதாயம்.