- அஸ்வெசும நன்மைகள் குறைந்த வருமானம் பெறும் மக்களின் நலனுக்கானதாகும்…
- பொருளாதாரத்தை பலப்படுத்தும் தீர்மானங்களை எடுக்கும்போது, குறைந்த வருமானம் பெறும் மக்களை அரசாங்கம் புறக்கணிக்காது…
- முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டமானது…
- வளம் நிறைந்த நிலம் எம்மிடம் உள்ளது…
மாத்தளை மாவட்ட செயலகத்தில் 2024.01.17 அன்று நடைபெற்ற முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறு கோழிப்பண்ணை உரிமையாளர்களை வலுவூட்டுதல் ஆகிய நோக்கத்துடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. சீனாவின் யுனான் மாகாணத்திற்கான விஜயத்தின் போது பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க, சீனத் தூதுவர் கியு ஷென் ஹொன் அவர்கள் நூறு முட்டை அடைகாப்பகங்களை பிரதமரிடம் வழங்கியதுடன், இந்த இயந்திரங்கள் விவசாய அமைச்சின் ஹதபிம அதிகாரசபையால் நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்
சீனாவிடமிருந்து எமக்கு கிடைக்கப்பெற்ற இந்த இயந்திரங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் பயன் கிடைக்கும் வகையில் விநியோகிக்கப்படுகின்றன. மத்திய மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்கு அபிவிருத்திக் குழு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன். இதற்கு மாவட்ட செயலாளர் உட்பட அனைத்து பிரதேச செயலாளர்களும் ஆதரவளிக்க வேண்டும்.
அஸ்வெசும உதவித்தொகை திட்டத்திற்காக தெரிவு செய்யும் நடவடிக்கைகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. மேன்முறையீடுகள் தொடர்பான முதல் கட்ட விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது. அதற்கு இணையாக, 2024ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி, அதற்கான தொகையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இது எமது குறைந்த வருமானம் பெறும் மக்களின் நலனுக்கானதாகும்.
குறைந்த வருமானம் பெறும் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தின் காரணமாக இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. குறைந்த வருமானம் பெறும் மக்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் என்ற வகையில் இந்த இக்கட்டான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு உங்கள் ஆதரவை நாங்கள் எதிர்பாரக்கின்றோம்.
இது சரியான புள்ளிவிபரங்களைத் தயாரித்து, பொருளாதாரத்தை சரியான முறையில் வலுப்படுத்துவதற்காகும். நாட்டைப் பற்றி சிந்தித்து, கிராமங்களில் உள்ள அனைத்து அரச அதிகாரிகளின் ஆதரவும் இந்த நேரத்தில் தேவை. மிகவும் கஷ்டங்களுடன் வாழும் மக்களுக்கு கை கொடுப்பது அரசாங்கத்துறையின் ஆழமான பொறுப்பாகவே கருத வேண்டும். இப்படிப்பட்ட அரசாங்க சேவை நிறைவேறும் பட்சத்தில், பல்வேறு துறைகளுக்கு மக்களின் ஆதரவையும், பங்களிப்பையும் பெற்றுக்கொள்ள முடியும். கிராமங்களில் உள்ள எங்கள் கள உத்தியோகத்தர்கள் மக்களின் அனைத்து பிரச்சனைகளிலும் தலையிடுகிறார்கள். வெள்ளம் வந்தாலும், இரவில் புயல் அடித்தாலும், சூறாவளியில் சிக்கி வீடுகள் சேதமானாலும், முதலில் செல்வது நீங்கள்தான். கடமை ரீதியான உத்தரவு இருக்கிறதோ இல்லையோ, அதனை கடமையாக ஏற்றுச் செய்யும் போக்கு அரச நிர்வாகத்தின் ஒவ்வொரு துறையிலும் கிராமங்கள் வரை பரவியுள்ளது. இந்த நேரத்தில், இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உங்களின் ஆதரவை பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.
ஏனைய உற்பத்தித் துறைகளையும் இவ்வாறே வெற்றிகரமாகச் செய்ய நாங்கள் கைகோர்த்துச் செயற்படுவோம். வெளிநாட்டில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்கிறோம். இது துரதிர்ஷ்டவசமான செய்தியாகும். பாடசாலைகளில் சுகாதாரத் திட்டங்களில் சத்துணவாக முட்டை பரிந்துரைக்கப்படுகிறது. அந்த வகையில் கஷ்டமான நிலைமைக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டதால், வெளி நாடுகளில் இருந்து முட்டைகளை கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வளமான பூமி எங்களிடம் உள்ளது. இந்த வளம்நிறைந்த பூமியில் எது பயிரிடப்பட்டாலும் அது பலனைத் தரும். அதற்கான திட்டமிட்ட மற்றும் இலக்குமயப்பட்ட வேலைத்திட்டத்தை உங்கள் ஆதரவுடன் 2024 இல் சாத்தியப்படுத்த முடியும். எமது நாட்டில் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளை பெருந்தோட்டத் தொழிலுக்கு திறம்பட மாற்றுவதற்கான திட்டங்கள் தேவை. வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் மலைநாடு பற்றி விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளையர் அரசாங்கம் எமது கிராமங்களின் காணிகள் தங்களுடையது என அறிவித்தது. அவர்களுக்கு இந்த நாட்டில் எந்த உரிமையும் இருக்கவில்லை. வெளிநாட்டினராக வந்து எம்மை அடக்கி எமது கிராமங்களில் மக்கள் பயிர்செய்துவந்த காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தி எமது காணிகளை பறித்தார்கள். அந்த பிரச்சனை இன்றும் உள்ளது.
பயிர்செய்ய முடியுமான அனைத்து காணிகளிலும் புதிய தலைமுறையினர் கிராமங்களில் தொழில் முயற்சியாளர்களாக முன்னேறுவதற்கு இடமளிக்க வேண்டும். எமது கடின உழைப்பு நம்பிக்கை மற்றும் தேவை அபிவிருத்தியில் தாக்கம் செலுத்துகிறது. உலகிலேயே சிறந்த கறுவா உற்பத்தி செய்யும் நாடு எமது நாடு. அதற்கு வெளிநாடுகளிடமிருந்த அதிக கேள்வி உள்ளது. இதுபோன்ற விடயங்களை உலகிற்கு எடுத்துச் செல்ல பிரதேச அலுவலகங்கள் மூலம் விசேட கவனம் செலுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்.
பலரும் பல விடயங்களை சொன்ன போதிலும், நாட்டை கடந்த ஆண்டில் உணவில் தன்னிறைவு அடையச் செய்ய முடிந்தது. இதற்கு கிராமப்புற மக்கள் அதிக பங்களிப்பை வழங்கினர். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம்.
மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாலக பண்டார கோட்டேகொட, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு. கமகே, இலங்கை ஹதபிம அதிகார சபையின் தலைவர் சரத் சந்திரசிறி விதான, மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்ன, மேலதிக மாவட்ட செயலாளர் ஜே.பி.யு ஜயரத்ன, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) எப். ஆர். எம் ரியால்டீன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.