கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் வசிப்பவர்களுக்கு அரசு வழங்கும் விவசாய நில வன உரிமைச் சான்று பெற ஆளும்கட்சி எம்எல்ஏ பரிந்துரைக்க பேரம் பேசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் 130 கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, விவசாய நிலம் உள்ளிட்டவையோடு சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் கல்வராயன்மலையில் வசிப்பவர்களில் விவசாயம் செய்து வருவோரில் 100 பேருக்கு, விவசாய நில வன உரிமைச் சான்று வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக விண்ணப்பித்துள்ள மலைவாழ் மக்களின் மனுக்களை பரிசீலித்து, அதனடிப்படையில் விவசாயம் செய்துவரும் அப்பகுதி மலைவாழ் மக்களை கண்டறிந்து, அவர்களுக்கு விவசாய நில வன உரிமைச் சான்று வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் பூர்விக கல்வராயன்மலை வாழ் மக்கள் பயனடைவர்.
இதற்காக கிராம அளவில் ஒரு குழு, அதையடுத்து கோட்ட அளவிலான குழு, அதைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான குழு என 3 அடுக்கு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் இறுதி விசாரணைக்குப் பின், பயனாளிக்கான உரிமைச் சான்று வழங்கப்படும். இதற்கான கணக்கெடுப்பு பணிகளை வருவாய்த் துறையினரும், வனத்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கல்வராயன்மலை சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ளதால், விவசாய நில வன உரிமைச்சான்றுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் பட்டியலில், வனப் பகுதியில் வசிக்காத வேறு சிலருக்கு வழங்க சட்டப்பேரவை உறுப்பினர் உதயசூரியன் பரிந்துரைப்பதாகவும், அதற்காக பேரம் பேசப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் உண்மையான பயனாளிகள் பலருக்கு அரசு வழங்கும் உரிமைச் சான்று கிடைக்காமல் போகுமோ என்ற அச்சமும் அவர்களிடம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக கல்வராயன்மலை திட்ட இயக்குநர் கதிர்சங்கரிடம் கேட்டபோது, “இதில் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டுக்கு வாய்ப்பே இல்லை. முழுக்க முழுக்க குழு பரிந்துரையின் படியே வழங்கப்படும்.வேறு எவரும் தலையிடவும் முடியாது” என்று தெரிவித்தார்.
குற்றச்சாட்டு தொடர்பாக எம்எல்ஏ உதயசூரியனை தொடர்புகொண்ட போது, “இந்த நிலம் குறித்த போராட்டப்பின்னணியில் பெரும் வரலாறு உள்ளது. நில அனுபவமுள்ளவர்களின் நீண்டகால போராட்டத்துக்குப் பின், தற்போதுள்ள அரசு அவர்களுக்கு உதவுகிறது. இந்தச் சூழலில், இதில் நானோ அல்லது வேறு எம்எல்ஏவோ தலையிட முடியாது. யாருக்கும் இதில் வேலையில்லை. உண்மையான பயனாளிகள் பயனடைகின்றனர். யார் யாரோ ஏதோ சொல்வதெல்லாம் உண்மையாகி விடாது” என்று தெரிவித்தார்