அமேசான் இணையதளத்தில் அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து அமேசான் நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், முன்னணி ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் இணையதளத்தில் சில இனிப்புகளும், உணவுப் பொருள்களும் அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இனிப்புகள் மற்றும் உணவுகளில் ‘ஸ்ரீ ராம் மந்திர் அயோத்தி பிரசாதம்’ என விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில் அமேசான் நிறுவனம் தவறான வர்த்தக செயல்பாடுகளை கடைபிடிப்பதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது.
இந்த புகார் அடிப்படையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. அமேசான் இணையதளத்தில், அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் என்ற பெயரில் பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கண்டறிந்துள்ளது.

மக்களை தவறாக வழிநடத்தி அவர்களை பொருள்களை வாங்க வைக்கும் வகையில் இந்த பொருள்கள் விற்பனை செய்யபடுவதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஏழு நாள்களுக்குள் பதில் அளிக்கும்படி அமேசான் நிறுவனத்துக்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உரிய விளக்கம் அளிக்கத் தவறினால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையம் எச்சரித்துள்ளது.
அமேசான் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், “சில விற்பனையாளர்கள் மூலம் தவறான பெயரில் விற்கப்படும் பொருள்கள் தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் (CCPA) இருந்து எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எங்கள் கொள்கைகளின்படி இதுபோன்ற புகார்களுக்க்கு எதிராக நாங்கள் உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.