சென்னை: வீட்டு வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக 2 நாட்களில் தமிழக காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூவில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன்-மெர்லினா தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களது வீட்டில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் வேலைபார்த்து வந்தார்.
பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு வந்த அந்தப் பெண்,எம்எல்ஏ மகன் குடும்பத்தார் தன்னைகொடுமைப்படுத்தியதாக பெற்றோரிடம் தெரிவித்து, கதறி அழுதுள்ளார்.பெண்ணின் உடலில் உள்ள காயங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக மருத்துவமனை அளித்த தகவலையடுத்து, நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா தமிழக காவல் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “சென்னையில் 18 வயது பட்டியலினப் பெண் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை மேற்கொள்வதுடன், முதல் தகவல் அறிக்கையில் இந்திய தண்டனை சட்டத்தின் 323, 354 பிரிவுகளை சேர்த்து, முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பான அறிக்கையை 2 நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.