கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தம்பதியின் 18 வயதான மகள், கடந்தாண்டு தன்னுடைய 17-வது வயதில் ஏப்ரல் மாதம் ஏஜென்ட் ஒருவர் மூலமாக சென்னை திருவான்மியூரில் உள்ள, பல்லாவரம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டுக்கு வேலைக்கு சென்றிருக்கிறார். அங்கு அந்த இளம்பெண், தான் பல்வேறு கொடுமைகளைச் சந்தித்ததாகப் புகார் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி-யிடம் இளம்பெண் அளித்துள்ள புகாரில், “ஒருநாள் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை மர்லினா என்னை அடித்தார். அதில் எனக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் கத்தரிக்கோலை கொண்டு என் முடியை வெட்டிவிட்டுத் தாக்கினார். இதனால் கடும் காயங்கள் ஏற்பட்டது.
என் கைகளை தூக்கச் சொல்லி குழம்பு கரண்டியை கொண்டு மார்லினா என் மார்பில் அடிப்பார். என்னை கீழே படுக்கவைத்து, என் முகத்தில் செருப்பு காலால் எட்டி உதைப்பார். இரண்டு கைகளிலும் கன்னத்திலும் தாடையிலும் சூடு வைத்துள்ளார். ஒருநாள் ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக்கி, என்னை கடுமையாக தாக்கினார்.
ஆண்டோ மதிவாணனும் என்னை இரண்டு முறை அடித்திருக்கிறார். ஒருமுறை ஆண்டோ தன்னுடைய மனைவி மெர்லினாவிடம், `நீ அந்த நாயை என்ன வேண்டுமானாலும் செய்துகொள். ஆனால், என் குழந்தை முன்னால் அடிக்காதே, அதனால் நம் குழந்தை பாதிக்கப்படுகிறது’ என்று கூறினார். அன்று முதல் அவர்களுக்கு இடையே பிரச்னை வந்தது. அதற்கும் நான்தான் காரணம் என்று கூறி, மார்லினா என்னை கடுமையாக அடித்து சித்ரவதை செய்தார். கடந்த எட்டு மாதங்களாக நான் அடிவாங்காத நாள்களே கிடையாது.
தினமும் என்னை அடித்து துன்புறுத்தினார். `நீயும் உன் அம்மாவும் ரெட் லைட் ஏரியாவிற்குச் சென்றால், நன்றாக சம்பாதிப்பீர்கள்…’ என்று கூறி, இழிவுபடுத்தினார். என்னை மோசமான வார்த்தைகளாலும், சாதிரீதியாகவும் மிகவும் இழிவாகப் பேசினார். கடந்த 12-ம் தேதி துணி காய வைக்கவில்லை என்று கூறி, குழம்பு கரண்டியால் வலது கண், நெற்றி தலைப்பகுதியில் கடுமையாக தாக்கினார்.

இதனால் எனக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. என்னை படிக்க வைப்பதாகக் கூறி பத்து, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை மர்லினா வாங்கி வைத்துள்ளார். அதை எனக்குப் பெற்றுத் தர வேண்டும். அவர்கள் இருவர்மீதும் பட்டியல் சாதியினர்/ பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கு தகுந்த நீதி, நிவாரணம் மற்றும் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்காக சட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும், எவிடென்ஸ் கதிரிடம் பேசினோம். “கடந்த தீபாவளி அன்றுகூட மர்லினா தன் குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு, இளம்பெண்ணை வீட்டில் தனியாகப் பூட்டிவைத்துள்ளார். கடந்த வாரம் மார்லினாவை தொடர்புகொண்ட இளம்பெண்ணின் தாய், `நாங்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை பொங்கல்தான்.
எனவே, பொங்கலுக்கு அவளை கட்டாயம் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும்’ என கூறியிருக்கிறார். `நீங்கள் செல்லுங்கள் நாங்கள் கொண்டு வந்து விடுகிறோம்’ எனக் கூறி, கடந்த 15-ம் தேதி இரவு சொந்த ஊரில் ஆண்டோ தன் மாமனார் மற்றும் மாமியாருடன் காரில் கொண்டு வந்து விட்டுள்ளார். முன்னதாக, `உனக்கு 2 லட்சம் ரூபாய் ஃபீஸ் கட்டியிருக்கிறோம். ஊருக்குப் போய் ஏதாவது சொன்னால், உன் குடும்பத்தையே உள்ளே தூக்கி வைத்து விடுவோம்’ என ஆண்டோவும் மர்லினாவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

கையில் சூடுவைத்த காயம் தெரியக்கூடாது என்பதற்காக கையில் மருதாணி போட்டு மறைத்துள்ளனர். காவல்துறையினருக்கு FIR பதிவு செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர். வன்முறையை செய்துவிட்டு வாகனங்களில் வந்து ஊர்காரர்களை மிரட்டியுள்ளனர். வன்கொடுமை தொடர்பாக இப்போது தான் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் மருத்துவக் கனவை நிறைவேற்ற வேண்டும், மாதம்தோறும் 15 ஆயிரம் ரூபாய் சிறுமிக்கு வழங்க வேண்டும், இருவரையும் கைது செய்ய வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை பிணை கொடுக்கக் கூடாது. இது தமிழகத்திற்கு பெரும் அவமானம். முதலமைச்சர் ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது என ஒரு அறிக்கையை கூட முதலமைச்சர் விடவில்லை. இந்த விவகாரத்திற்கு முதலமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டும். 3 ஆண்டுகளில் எடுத்த அனைத்து வன்கொடுமை வழக்குகள் மீதும் சந்தேகம் எழுகிறது, சிறுமிக்கு இவ்வளவு பெரிய சித்ரவதை நடைபெற்றுள்ளது. 17 வயது சிறுமியை எப்படி வீட்டு வேலைக்கு சேர்த்தார்கள்?” என பல கேள்விகளை எழுப்பினார்.
இந்தச் சம்பவம் குறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸாரிடம் பேசினோம். “எம்.எல்.ஏ-வின் மகன் வீட்டில் வீட்டு வேலை செய்த இளம்பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஐபிசி 294 (பி), 324, 325, 506(1), மற்றும் எஸ்.சி, எஸ்.டி சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். இந்த வழக்கில் எம்.எல்.ஏ கருணாநிதியின் மருமகள் மார்லினா, மகன் ஆண்டோ மதிவாணன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இளம்பெண் சாட்டியிருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து மார்லினா மற்றும் ஆண்டோ மதிவாணனிடம் விசாரணை நடத்த அவரின் திருவான்மியூர் வீட்டுக்குச் சென்றபோது அங்கு அவர்கள் இல்லை. அதனால் அவர்கள் இருவருக்கும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருக்கிறோம். விசாரணைக்குப்பிறகு இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

சென்னை போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “எம்.எல்.ஏ- மகன் வீட்டில், கடந்த மே மாதம் முதல் அந்த இளம்பெண் வீட்டு வேலை செய்து வந்திருக்கிறார். அப்போது இளம்பெண்ணுக்கு கொடுத்த வாக்குறுதிகள், பேசிய சம்பளம் அங்கு கொடுக்கப்படவில்லை. அதனால், ஜூலை மாதத்தில் வீட்டு வேலை செய்ய விருப்பம் இல்லை என இளம்பெண், வீட்டின் உரிமையாளரிடம் கூறியிருக்கிறார். அதன்பிறகுதான் இளம்பெண்ணுக்கு கொடுமைகள், சித்ரவதைகள் நடந்திருக்கின்றன. பொங்கல் விடுமுறையையொட்டி கடந்த 15.1.2024-ம் தேதி இளம்பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதன்பிறகே இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமைகள் குறித்து எங்களுக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக நீலாங்கரை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் வளர்மதி ஆகியோர் இளம்பெண்ணின் வீட்டுக்கே சென்று அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். இளம்பெண் சாட்டியிருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் மருத்துவ ரிப்போர்ட் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது. தி.மு.க எம்.எல்.ஏ என்பதால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தது முதல் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் குற்றம் சாட்டப்பட்ட மார்லினா, மதிவாணன் ஆகியோர் விசாரணை செய்யப்படுவார்கள்” என்றார்.
பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ- கருணாநிதியோ `தன்னுடைய மகன் மதிவாணன், கடந்த ஏழு ஆண்டுகளாக திருவான்மியூரில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். நானும் அவரும் எப்போதாவது தான் அந்த வீட்டில் சந்தித்து பேசியிருக்கிறோம். அதனால் மகன் வீட்டில் நடந்த சம்பவம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இந்தச் சம்பவத்தில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம்’ என்று தெரிவித்திருக்கிறார்.
அதைப்போல எம்.எல்.ஏ-வின் மகன் ஆண்டோ மதிவாணனும், மருமகள் மார்லினாவும் வெளியிட்டுள்ள ஆடியோவில், “வீட்டு வேலை செய்த இளம்பெண்ணை தங்கள் வீட்டில் ஒருவரைப் போலவே நன்றாக கவனித்து வந்தோம். வீட்டில் அவரின் பிறந்தநாளை கொண்டாடினோம். பாட்டு பாடி நடனமாடி எங்களோடு இருந்த வரை இளம்பெண் மகிழ்ச்சியாகத் தான் இருந்தார். எங்கள் மாமனார் எம்.எல்.ஏ கருணாநிதிக்கும் இந்த புகாருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவரது இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை இந்த சம்பவத்தை வைத்து காலி செய்யப் பார்க்கிறார்கள்.

எங்கள் வீட்டில் மகிழ்ச்சியாக வேலை செய்து வந்த இளம்பெண், ஏன்? எதற்காக? எங்கள் மீது குற்றம் சாட்டினார் என்று தெரியவில்லை’ என்று கூறியிருக்கிறார்கள். கடந்த 16.1.2024-ம் தேதி புகாரை தெரிவித்த நிலையில், மூன்று நாள்களுக்குப்பிறகு 19-ம் தேதிதான் போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்தோம். “இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியான உடனே தலைமை எம்.எல்.ஏ கருணாநிதியை அழைத்துப் பேசியது. ‘இப்படி ஒண்ணு நடந்ததே எனக்கு தெரியாது’ என்று எம்.எல்.ஏ கூற, ‘தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் எதிர்க்கட்சியினருக்கு நாமே பேச பாயிண்ட் எடுத்துக் கொடுப்பதா?’ என தலைமை கடிந்து கொண்டதாம்.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் நகல் கூட வெளியாகாத அளவுக்கு கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறதாம் காவல்துறை. மேலும் தலைமறைவாகி உள்ள மார்லினா, ஆண்டோ மதிவாணன் இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை முழு ஈடுபாடு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
இந்நிலையில், மார்லினா, ஆண்டோ மதிவாணன் இருவரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே இளம்பெண் மீதான தாக்குதல் தொடர்பாக ஐபிசி பிரிவு 323 மற்றும் 354 கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இது குறித்து 2 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் தமிழ்நாடு காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 323 இன் படி, யாரேனும் ஒருவரைத் தானாக முன்வந்து காயப்படுத்துபவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும. இதேபோன்று, ஐபிசியின் 354வது பிரிவு, ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் நடந்து கொள்வது, பெண்ணுக்கு எதிரான தாக்குதல் அல்லது கிரிமினல் நடவடிக்கையை குறிக்கிறது. இந்த பிரிவின் படி, 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து.விதிக்கப்படும்.
கைதா?, முன் ஜாமீனா? என்பது வரும் திங்கட்கிழமைக்கு தெரிந்துவிடும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY