அயோத்தியில் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் நாளை நடைபெறவிருக்கிறது. இந்தியா முழுவதும் அயோத்தி சார்ந்த விஷயங்கள்தான் இப்போது பேசுபொருளாக இருக்கிறது. அயோத்தியில் அந்த ராமர் கோயிலுக்காக செய்யப்பட்டிருக்கும் இன்னபிற வசதிகளைப் பற்றியும் நாம் இங்கே பேசியாக வேண்டும்.

1984 இல் அயோத்திக்கு சென்று வந்து எழுத்தாளர் ஒருவர் ஆனந்த விகடனில் கட்டுரை எழுதியிருந்தார். அதில், ‘ஸ்ரீராமன் பிறந்த அயோத்தியை நகரம் என்பதை விட கிராமம் என்றே சொல்லலாம். காசியிலிருந்து 4 முதல் 4:30 மணி நேர பிராயணம், லக்னோ நகரத்திலிருந்து இரண்டரை மணி நேர பிராயணம். புண்ணிய நதியான சரயு அயோத்தியைச் சுற்றி ஓடுகிறது.’ இப்படித்தான் அந்தக் கட்டுரையை தொடங்கியிருப்பார். 80 களில் மட்டுமல்ல அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாள் வரைக்குமே அயோத்தி ஒரு கிராமம்தான். குறுகலான தெருக்களாக நெரிசலான பகுதிகளாக பல இடங்களில் கெடுபிடியான காவல் கண்காணிப்புகளை கொண்ட ஆன்மீக கிராமம் அது. ஆனால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான வேலைகள் தொடங்கியதிலிருந்து அந்த கிராமமும் நவீன நகரமாக உருமாறத் தொடங்கியது. கோயிலுக்கு வரவிருக்கும் பக்தர்களுக்காகவும் பயணிகளுக்காவும் அயோத்தியைச் சுற்றி எக்கச்சக்கமான நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டு ‘புதிய அயோத்தி’ என சொல்லுமளவுக்கு புது வெளிச்சத்தைப் பெற்றிருக்கிறது.
வெளியூர்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வருபவர்களுக்கு வசதியாக புதிதாக விமான நிலையமும் இரயில் நிலையமும் கட்டப்பட்டிருக்கிறது. ராமர் கோயில் அமைந்திருக்கும் இடத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் 251 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட இரயில் நிலையம் அமைந்திருக்கிறது. விமான நிலையங்களுக்குரிய செட்டப்போடு நவீன வசதிகளுடம் இந்த ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. அதிகப்படியான மக்கள் வந்து காத்திருந்து பயணங்களை மேற்கொள்வதற்கான விசாலமான இடவசதி செய்யப்பட்டிருக்கிறது.

பழைய அயோத்தி ரயில் நிலையத்தில் 26 ரயில்கள் வந்து செல்வதற்கான வசதியும் ஒரே நாளில் 10,000 பயணிகளைக் கையாளும் வசதியுமே இருந்திருக்கிறது. இப்போது அமைக்கப்பட்டிருக்கும் புதிய இரயில் நிலையத்தில் 50 ரயில்கள் வந்து செல்வதற்கான வசதியும் ஒரே நாளில் 50,000 பயணிகளைக் கையாளும் வசதியும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேமாதிரி 1426 கோடி ரூபாய் செலவில் 821 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையமமும் கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு ‘மகரிஷி வால்மீகி’ எனப் பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது. விரைவில் அனைத்துவிதமான விமானங்களையும் இயக்கும் வகையிலான விசாலமான ஓடுதளங்களும் அமைக்கப்படவிருக்கிறது. இந்த விமான நிலையத்திற்கு அருகிலேயே 400 கோடி ரூபாய் மதிப்பில் 150 ஏக்கரில் ‘ஏரோ சிட்டி’ என்ற ஒன்றும் அமையவிருக்கிறது. இதில் உணவகங்கள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் போன்றவை அமையவிருக்கிறது. இந்தத் திட்டம் இப்போதைக்கு தொடக்க நிலையில் இருக்கிறது.
அயோத்தி வளர்ச்சிப் பணிகள் ஆணையம் என ஒரு குழு அமைக்கப்பட்ட அதன்கீழ்தான் இந்த பணிகளெல்லாம் செய்யப்பட்டிருக்கிறது. அயோத்தி கோயிலை நோக்கிச் செல்லும் சாலைகளுக்கு ராம பாதை, தர்ம பாதை, ராமஜென்ம பூமி பாதை, பக்தி பாதை எனப் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சாலையும் பல கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய பொலிவை பெற்றிருக்கிறது.
லக்னோவின் சாத்கஞ்ச்சிலிருந்து லதா மங்கேஷ்கர் சவுக் வரைக்குமான 13 கி.மீ நான்கு வழிச்சாலை மட்டும் 845 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ராம பாதையில் ராம் புராதண நடைபயணம் என்ற பெயரில் 9 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவிருக்கிறது.

நடக்கிற வழியிலேயே சுவர் ஓவியங்கள் மற்றும் முக்கிய இடங்கள் மூலம் ராமாயண கதாபாத்திரங்களைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் இந்தத் திட்டம் இருக்கப்போகிறது. 566 மீட்டர் மட்டுமே உடைய ராம ஜென்ம பூமி பாதை முக்கியமானது. இதுதான் ராமர் கோயிலுக்குள் பக்தர்களை அழைத்து செல்லும் பாதை. இதற்கு மட்டும் 41 கோடி ரூபாய் செலவளித்திருக்கிறார்கள்.
நகரத்திற்குள்ளேயே 7 ஸ்டார் ஹோட்டல்கள் தொடங்கி சிறிய உணவகங்கள் வரைக்குமென மொத்தமாக 35 ஹோட்டல்கள் கட்டப்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
லக்னோ – கோரக்பூர் தேசிய நெடுஞ்சாலையின் இருபக்கமும் பசுமைவெளி நகரம் என்ற பெயரில் ஒரு டவுன்ஷிப் ப்ராஜக்ட்டையும் அமைத்திருக்கிறார்கள். அப்பார்ட்மென்ட்டுகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் என எல்லாமே அமையப்பெற்றிருக்கும் இந்தத் திட்டத்தின் மதிப்பு 3000 கோடி ரூபாய். நான்கு இடங்களில் 700 கார்களை நிறுத்தும் வகையில் 155 கோடி ரூபாய் மதிப்பில் பார்க்கிங் காம்ப்ள்க்ஸ்களும் கட்டப்பட்டிருக்கிறது.
இதுபோகக் கோயில்களின் அருங்காட்சியகமும் 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவிருக்கிறது. இந்தியாவின் முக்கிய கோயில்களின் வரலாற்றுப் பின்னணியை விளக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை இறுதி செய்யும் பணியில் இருக்கிறது அயோத்தி வளர்ச்சிப் பணிகள் ஆணையம். 2 ஏக்கர் பரப்பளவில் மெழுகு சிலை அருங்காட்சியகமும் அமைக்கவிருக்கிறார்கள். அதில் ராமாயண கதாபாத்திரங்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய தலைவர்களின் உருவங்கள் மெழுகு சிலைகளாக வைக்கப்படவிருக்கிறது. இதெல்லாம் போக, பக்தர்களுக்கு வசதியாக திறந்தவெளி உணவு பூங்காக்கள், தங்கும் வசதியுடன் கூடிய குடிசை நகரங்கள் போன்றவையும் அமைக்கப்படவிருக்கின்றன.

திறப்பு விழாவுக்குப் பிறகு, பக்தர்கள் ராமர் கோயிலுக்குள் வரத்தொடங்கும் போது ஒரு நாளைக்கு 80,000 முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை வரக்கூடும் என எதிர்பார்க்கிறார்கள். இவ்வளவு வசதிகளுடன் இவ்வளவு பயணிகள் அயோத்தி நகருக்கு வரும்போது அது பெரியளவிலான வர்த்தகப் பலன்களையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.