அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு பிரதமர் மோடி முன்னிலை வகித்தார். அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழகத்தில் கோயில்களில் சிறப்பு பூஜை செய்யவும், ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யவும் அரசு தடை விதித்து இருப்பதாக நாளிதழில் செய்தி வெளியாகி இருக்கிறது. தி.மு.க அரசு செய்வது இந்து விரோத செயல்” என கொதித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது” எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “அமைதியான முறையில் கோயிலுக்குள் நடைபெறக்கூடிய நிகழ்வுகளில் தி.மு.க கை வைப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அனுமதியெல்லாம் ஒன்றும் தேவையில்லை. அவர்கள் என்ன நிறுத்துகிறார்கள் என்பதைப் பார்த்துக் கொள்ளலாம். எல்லா கோயில்களிலும் பூஜை செய்யுங்கள் மக்களுக்குத் திருப்தியாக சாப்பாடு போடுங்கள் என்று பா.ஜ.க நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறோம்.

யார் தடுக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்ளலாம். இதைத் தடுத்தால் தான் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். உதயநிதி நடத்தும் விழாவுக்குத் தமிழ்நாட்டின் பேருந்துகளை எல்லாம் திருப்புகிறீர்கள். தங்கை கொடியேற்றுகிறார், மகன் நிகழ்வு நடத்துகிறார், முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டு குடும்ப விழா போல தி.மு.க-வின் இளைஞரணி மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. அதற்கெல்லாம் தமிழக அரசு அனுமதி கொடுக்கும். ஆனால், கோயிலுக்குள் நடக்கிற நிகழ்வுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது?. தீபாவளி, பொங்கலுக்கும் இந்த அரசு இதே மாதிரி அறிக்கை கொடுக்குமா?
எங்களின் தொண்டர்கள் அனைவரிடத்திலும் தடையை மீறி இறங்குங்கள் என்று சொல்லி இருக்கிறோம். எல்லாம் ஓரளவுக்குதான் பொறுக்க முடியும். ஒழுக்கமாக நடந்து கொண்டால் தான் அரசுக்கு மரியாதை. அப்படி நடந்து கொள்ளவில்லை என்றால் அரசுக்கு மரியாதை கிடையாது. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இந்த அரசுக்கு ஆணவம் அதிகம் ஆகிவிட்டது. மக்களின் வழிபாட்டு நெறிமுறைகளில் கை வைக்கலாம் என்று முடிவு செய்து விட்டார்கள். இனி இந்த அரசு மீது மரியாதை இல்லை. பா.ஜ.கவின் எந்த தொண்டனும் அரசை மதிக்கப் போவது கிடையாது” வெடித்தார்.

மேலும் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் நேற்று அண்ணாமலை, “நாளைய தினம் அயோத்தியில் ராமர் திருவுருவச் சிலை, பிரதமர் நரேந்திர மோடியால், பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. சாதி மத வேறுபாடின்றி, மக்கள் அனைவரும் இந்த புண்ணிய தினத்தை வரவேற்கின்றனர். பல ஆண்டு காலமாக நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் அனைத்திலும் சிறப்புப் பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மதச்சார்பற்ற அரசு நடத்துகிறோம் என்ற பெயரில் இந்துமத விரோதச் செயல்பாடுகளையே முழு வேலையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு, தமிழக ஆலயங்களில் சிறப்புப் பூஜைகளுக்கும் அன்னதானத்துக்கும் தடை விதித்துள்ளதாகத் தெரிகிறது. ஆலய நடைமுறைகளில் தலையிட திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? அதுமட்டுமின்றி, ராமர் சிலை நிறுவப்படுவதை முன்னிட்டு, தமிழகத்தில் கோயில் நிர்வாகம் சார்பிலோ, பொதுமக்கள் சார்பிலோ, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்றும் காவல்துறையினர் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகக் கோயில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை. ஆலய நடைமுறைகளில் தேவையில்லாமல் தலையிடவோ, வழிபடும் முறைகளில் குறுக்கிடவோ திமுக அரசுக்கு எந்த உரிமையுமில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்து மத மக்களின் அடிப்படை உரிமையான ஆலய வழிபாட்டைத் தடுப்பதை, மாற்று மத மக்களே விரும்ப மாட்டார்கள். யாரை திருப்திபடுத்த இந்த பிரிவினை முயற்சியில் ஈடுபடுகிறது தி.மு.க அரசு?. மாதம் ஒருமுறை இந்து மத மக்களைச் சீண்டிப் பார்க்கும் அற்பச் செயல்பாடுகளை தி.மு.க கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தி.மு.கவின் தடையை மீறி, அயோத்தி ராமர் கோயில் விழாவுக்காக, தமிழகக் கோயில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், ” ‘தனியார் திருமண மண்டபங்கள், தனியார் கோவில்களில் ராமர் கோவில் நிகழ்ச்சியை நடத்த அனுமதி தேவையில்லை’ என நீதிமன்றம் சொல்கிறது. அதேநேரத்தில் மற்றொரு உத்தரவில் ‘கோவில்களில் பூஜை, நேரலை செய்ய வேண்டும் என்றால் செயல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்’ என கூறியிருக்கிறது. ஒரு பொது இடத்தில் மதியம் 12.15 மணியில் இருந்து 12.55 மணி வரையில் நேரலை செய்கிறார்கள் என்றும் அப்போது அங்கு கூடியிருப்போர், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷம் ஒலி எழுப்புவதாகவும் வைத்துக்கொள்வோம்.

அந்த நேரத்தில் சம்மந்தப்பட்ட இடத்திற்கு அருகில் ஒரு மசூதி இருப்பதாக வைத்துக்கொள்வோம். அங்கு ‘அல்லாஹு அக்பர்’ என பாங்கு ஓதுகிறார்கள். இதில் எந்த சத்தத்தை குறைப்பீர்கள்?. அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு உயிரிழப்பு நடந்தால் யார் பொறுப்பு?. ஒரு நிகழ்ச்சி நடத்துகிறீர்கள் என்றால் போலீஸில் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால் இதற்கு மட்டும் முன் அனுமதி தேவையில்லை என நீதிமன்றமும், பாஜகவும் சொல்கிறது. திட்டமிட்டு முதல்நாள் தடை என செய்தி பரப்புகிறீர்கள். இது ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சி.
அதற்கு முன் அனுமதி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லை. இதன் மூலம் தி.மு.க அரசு தடை விதிக்கும். அதைவைத்து ஒரு கலவரம் செய்யலாம். பிறகு மக்களிடத்தில் சண்டை மூட்டி விட்டு குளிர் காயலாம். கலவரத்தை தூண்டலாம் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY