1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய சக்தி அமைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு

நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்தித் தரும் ‘பிரதமரின் சூர்யோதயா’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் மோடி, “உலகின் அனைத்து மக்களும் எப்போதும் சூர்யவம்சத்தைச் சேர்ந்த பகவான் ஸ்ரீ ராமரின் ஒளியிலிருந்து சக்தியைப் பெறுகிறார்கள். அயோத்தியில் இன்று ராமர் ஆலய பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றுள்ள புனிதத் தருணத்தில், நாட்டு மக்களின் வீடுகளின் மேற்கூரையில் சொந்த சூரிய சக்தி அமைப்பை உருவாக்கித் தரும் தீர்மானம் மேலும் வலுவடைந்துள்ளது.

அயோத்தியில் இருந்து திரும்பிய பிறகு நான் எடுத்த முதல் முடிவு என்னவென்றால், 1 கோடி வீடுகளில் மேற்கூரை சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதை இலக்காகக் கொண்ட ‘பிரதமரின் சூர்யோதயா யோஜனா’ என்ற திட்டத்தைத் தொடங்குவதாகும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமின்றி, மின்சாரத் துறையில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஒரு கோடி வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட ‘பிரதமரின் சூர்யோதயா யோஜனா’ என்ற திட்டத்தைத் தொடங்குவதற்கான கூட்டத்துக்கு அவர் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தின்போது, ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் நோக்கிலும், மின்சாரத் தேவைகளுக்குத் தற்சார்பு உடையவர்களாக அவர்களை மாற்றும் நோக்கிலும் சூரிய சக்தி மேற்கூரை அமைப்பை பயன்படுத்தலாம் என்று பிரதமர் கூறினார்.

பிரதமரின் சூர்யோதயா திட்டமானது, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நபர்களுக்கு சூரியசக்தி மேற்கூரை அமைப்பதன் மூலம் மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் உபரி மின்சார உற்பத்திக்குக் கூடுதல் வருமானமும் கிடைக்கும். வீடுகளைச் சேர்ந்த மின் நுகர்வோர், மேற்கூரை சூரிய மின்சக்தி அமைப்பை அதிகம் நிறுவுவதை ஊக்குவிக்க ஒரு பெரிய தேசிய இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.