கோடநாடு வழக்கில் எடப்பாடியை தொடர்புபடுத்தி கருத்து: தடையை நீக்கக் கோரி உதயநிதி பதில் மனு

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்துக்களை தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான பதில் மனுவில், “கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தங்கள் தரப்பு சாட்சியாக விசாரிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதனால் இந்த வழக்குக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என எடப்பாடி பழனிசாமி கூற முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சனாதனம் குறித்த புரிதல், கோடநாடு கொலை கொள்ளை வழக்கின் நிலைப்பாடு, ஆளுனருடன் நட்பு ஆகியவற்றை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும், உதயநிதி பேசியிருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்னைப் பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மட்டுமே அறிக்கை வெளியிட்டதாக கூறியிருக்கிறார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தங்கள் தரப்பு சாட்சியாக விசாரிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதனால் இந்த வழக்குக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என எடப்பாடி பழனிசாமி கூற முடியாது” என உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

கோடநாடு சம்பவம் நடந்தபோது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார் என்பதால் பொது ஊழியராக அவரது செயல்பாடு குறித்து பொதுநலன் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டதாகக் கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின், தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என பதில் மனுவில் கோரியிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலினின் பதில் மனுவுக்கு விளக்கமளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்று, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 26ஆம் தேதிக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.