2023-ம் ஆண்டிற்கான உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்றது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி பெற்றிருந்தாலும் அந்த உலகக்கோப்பைத் தொடரில் தொடர்ந்து பத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று பலரது பாராட்டுகளையும் பெற்றிருந்தது. இந்நிலையில் 2023-ல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 வீரர்களைக் கொண்ட அணியை ஐ.சி.சி அறிவித்திருக்கிறது.

அந்த 11 பேரில் 6 பேர் இந்திய வீரர்கள்தான் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் ரோஹித் சர்மாவை அணியின் கேப்டன் மற்றும் முதல் துவக்க வீரராக ஐசிசி அறிவித்திருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்த விஷயம். 2-வது துவக்க வீரராக சுப்மன் கில் தேர்வாகி இருக்கிறார். 3-வது இடத்தை ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் பிடித்திருக்கிறார். 4-வது இடத்தில் இந்தியாவின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி இடம்பிடித்திருக்கிறார்.
5வது இடத்துக்கு நியூசிலாந்து வீரர் டார்ல் மிட்சேலும் 6வது இடத்துக்கு தென்னாப்பிரிக்க வீரர் ஹென்றிச் கிளாசனும் தேர்வாகி இருக்கின்றனர். 7வது இடத்திற்கு தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டர் மார்கோ யான்சென்னும், 8வது இடத்திற்கு 2023-ல் 38 ஒருநாள் விக்கெட்டுகளை எடுத்த ஆஸ்திரேலியாவின் ஜாம்பாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

9வது இடத்தில் கடந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டிலும் எழுச்சி பெற்ற முகமது சிராஜ்ஜூம் 10வது இடத்தில் 49 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப் யாதவும் 11வது இடத்தில் உலகக் கோப்பையில் 24 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டிய இந்தியாவின் முகமது ஷமியும் இடம்பிடித்திருக்கின்றனர்.
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.