போபால் :மத்திய பிரதேசத்தில், குனோ தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் பெண் சிவிங்கிப்புலி, மூன்று குட்டிகளை ஈன்றது.
நம் நாட்டில், சிவிங்கிப்புலி இனத்தை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியாக, 2022 செப்டம்பரில், ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கிப்புலிகள் கொண்டு வரப்பட்டன.
இவற்றை ம.பி.,யின் ஷியோபூரில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார். இதைத் தொடர்ந்து, தென் ஆப்ரிக்காவில் இருந்து, மேலும் 12 சிவிங்கிப்புலிகள், 2023 பிப்ரவரியில் கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில், ஜுவாலா என்ற பெண் சிவிங்கிப்புலி, சமீபத்தில் மூன்று குட்டிகளை ஈன்றது. இத்தகவலை, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், சமூக வலைதளத்தில் தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச்சில், ஜுவாலா சிவிங்கிப்புலி நான்கு குட்டிகளை ஈன்றது. இதில் மூன்று குட்டிகள் உயிரிழந்தன. தற்போது, 10 மாத இடைவெளியில், இந்த சிவிங்கிப்புலி மேலும் மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
கடந்த 3ம் தேதி, ஆஷா என்ற பெண் சிவிங்கிப்புலி மூன்று குட்டிகளை ஈன்றது. இதன் வாயிலாக, இந்த மாதத்தில் மட்டும் ஆறு குட்டிகள் பிறந்துள்ளன. 2023 மார்ச்சில் இருந்து இதுவரை, மூன்று குட்டிகள் உட்பட மொத்தம் 10 சிவிங்கிப்புலிகள் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் உயிரிழந்துள்ளன.
தற்போதைய நிலவரப்படி, ஆறு ஆண் சிவிங்கிப்புலிகள், ஏழு பெண் சிவிங்கிப்புலிகள் மற்றும் ஏழு குட்டிகள் என, மொத்தம் 20 சிவிங்கிப்புலிகள் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement