புதுடில்லி, சீன கடற்படையின் உளவுக் கப்பலான, ஜியாங் யாங் ஹாங் – 03, மாலத்தீவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கப்பலின் வருகை மத்திய அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுடன் சீனா நட்பு பாராட்டி வருகிறது.
நெருக்கடி
இந்த நாடுகளுக்கு பல்வேறு வகையிலும் நிதி உதவி அளிக்கும் சீன அரசு, இந்தியாவை உளவு பார்க்க உதவும்படி அந்நாடுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
இலங்கையின் அம்பன்தோட்டா, பாகிஸ்தானின் கராச்சி துறைமுகங்களில் தங்கள் கடற்படைக்கு சொந்தமான உளவு கப்பல்களை நிறுத்தி, சீனா ஏற்கனவே நம்மை உளவு பார்த்த சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறி உள்ளன.
இந்நிலையில், சீன ஆதரவாளரான முகமது முய்சு, தெற்காசிய நாடான மாலத்தீவு அதிபராக சமீபத்தில் பதவி ஏற்றதில் இருந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறார்.
மாலத்தீவில் உள்ள இந்திய படைகளை மார்ச் 15க்குள் திரும்பப் பெற கெடு விதித்துள்ளார். மேலும், சமீபத்தில் சீனா சென்ற முய்சு, அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் அவதுாறு கருத்து தெரிவித்த விவகாரத்தில் இந்தியா – மாலத்தீவு உறவு உரசலில் உள்ளது.
இந்த நேரத்தில், சீன கடற்படைக்கு சொந்தமான ஜியாங் யாங் ஹாங் 03 என்ற உளவுக் கப்பல், மாலத்தீவு தலைநகர் மாலேவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கப்பல், இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை கடந்து, சுந்தா ஜலசந்தி அருகே இந்திய பெருங்கடல் பகுதியை அடைந்துள்ளதாகவும், அடுத்த மாதம் 8ம் தேதி மாலே வந்தடையும் என்றும் செயற்கைக்கோள் புகைப்படம் வாயிலாக தெரியவந்துள்ளது.
ஆய்வு
ஆராய்ச்சி கப்பல் என்ற பெயருடன் மாலத்தீவு வரும் இந்த கப்பல், 4,300 டன் எடை உடையது. இந்த கப்பல் இந்திய பெருங்கடலின் தரைப்பகுதியை ஆய்வு செய்து வருகிறது.
இதன் வாயிலாக, இப்பகுதியில் ஏற்படக்கூடிய எதிர்கால இயற்கை பேரிடருக்கான சாத்தியக்கூறுகள், அப்பகுதியில் நீர்மூழ்கி கப்பல்களை இயக்குவதற்கான வசதிகள் குறித்த தகவல்களை சீனா சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இது மத்திய அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்