வைஜெயந்தி மாலா, சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷண் விருது

இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்ம விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறையை சார்ந்த மொத்தம் 132 பேருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 பத்ம விபூஷண், 17 பத்ம பூஷண் மற்றும் 110 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும்.

கலைதுறையை பொருத்தமட்டில் மூத்த நடிகை வைஜெயந்தி மாலா பாலி மற்றும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு இந்தியாவின் உயர்ந்த இரண்டாவது விருதான பத்மவிபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியத்திற்கும் பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மவிபூஷண் வைஜெயந்தி மாலா
தமிழகத்தை சேர்ந்தவர் பழம்பெரும் நடிகை வையெந்தி மாலா பாலி(90). பரதநாட்டிய கலைஞரான இவர் தனது 16 வயதில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு, ஹிந்தி வரை சென்று உச்சம் தொட்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏறத்தாழ 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடித்த படங்கள் குறைவு என்றாலும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காவியமாக திகழ்ந்தது. ஏற்கனவே பத்மஸ்ரீ(2001), பத்மபூஷண்(2011) விருதுகளை வென்றுள்ள வையெந்தி மாலாவிற்கு இப்போது மற்றொரு மகுடமாக பத்ம விபூஷண் விருதும் சேர்ந்துள்ளது.

பத்மவிபூஷண் சிரஞ்சீவி
தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர் சிரஞ்சீவி(68). . தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'ராணுவ வீரன்' படத்தில் வில்லனாகவும், பாலசந்தர் இயக்கிய '47 நாட்கள்' படத்தில் கதாநாயகனாகவும் நடித்தவர். சென்னையில் உள்ள திரைப்படக் கல்லூரியில் பயின்ற சிரஞ்சீவி பின்னர் தெலுங்குத் திரையுலகத்தில் கதாநாயகனாக வளர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். 150 படங்களை தாண்டி தற்போதும் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கடந்த 2006ல் பத்மபூஷண் விருது பெற்ற இவருக்கு இப்போது பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மபூஷண் விருது
பிரபல ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரபோர்த்தி, பின்னணி பாடகி உஷா உதூப் ஆகியோருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.