அட்மோர்: அமெரிக்காவில் முதன்முறையாக கொலை குற்றவாளி ஒருவருக்கு நைட்ரஜன் வாயுவை செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் சென்னட் என்பவர், தன் மனைவி எலிசபெத் பெயரில் உள்ள காப்பீட்டு தொகையை பெற அவரை கொல்ல திட்டமிட்டார்.
மூச்சுத்திணறல்
இதற்காக கென்னத் யூஜின் ஸ்மித் மற்றும் ஜான் பார்க்கர் என்ற இருவரை ஏற்பாடு செய்தார்.
திட்டமிட்டபடி, இவர்கள் இருவரும் எலிசபெத்தை அடித்துக் கொன்றனர்.
இந்த சம்பவம் கடந்த 1988ல் நடந்தது. அடுத்த சில மாதங்களிலேயே சார்லஸ் தற்கொலை செய்து கொண்டார். இந்த கொலை வழக்கில் கென்னத் மற்றும் பார்க்கரை போலீசார் கைது செய்தனர்.
இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, 2010ல் ஜான் பார்க்கருக்கு ஊசி வாயிலாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2022ல் கென்னத்துக்கு மரண தண்டனையை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.
அப்போது விஷ ஊசி போடுவதற்கான நரம்பை கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட சிக்கலால் அது நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், உலகிலேயே முதன்முறையாக நைட்ரஜன் வாயுவை செலுத்தி, அவருக்கு நேற்று முன்தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதற்காக அலபாமா சிறையில் ஏற்பாடு செய்யப்பட்ட தனி அறையில் படுக்கையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், 58 வயதான கென்னத் படுக்க வைக்கப்பட்டார்.
இதையடுத்து, அவருக்கு நைட்ரஜன் வாயுவை மட்டுமே சுவாசிக்கும்படியான முகமூடி அணிவிக்கப்பட்டது.
இந்த முறையில் தொடர்ந்து நைட்ரஜன் வாயு செலுத்தப்பட்டதை அடுத்து மூச்சுத்திணறி அவர் உயிரிழந்தார். ஒட்டுமொத்தமாக இந்த முறைக்கு 22 நிமிடங்கள் ஆனதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொடூர பரிசோதனை
இதற்கு முன், 1999-ல் ஹைட்ரஜன் சயனைடு வாயுவைப் பயன்படுத்தி குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால், முதன்முறையாக நைட்ரஜன் வாயுவை செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்த முறைக்கு அமெரிக்க மனித உரிமை வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த முறை மனிதாபிமானம் நிறைந்தது என அமெரிக்க அரசு கூறினாலும், பல்வேறு தரப்பினர் இதை கொடூரமான பரிசோதனை முயற்சி என விமர்சித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்