“நிதிஷ் குமாரிடம் பேச மல்லிகார்ஜுன கார்கே பலமுறை முயன்றார். ஆனால்…" – ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி: “நிதீஷ் குமாருடன் பேசுவதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பலமுறை முயன்றார். ஆனால் நிதீஷ் குமார் பிஸியாக இருக்கிறார். அதே சமயம் நிதீஷ் குமார் அழைத்தபோது, மல்லிகார்ஜுன கார்கே சில கூட்டங்களில் இருந்தார்” என காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியுடனான கூட்டணியிலிருந்து விலகி பாஜக கூட்டணிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வரவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) கூட்டணி மாறி மீண்டும் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிஹார் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இந்நிலையில், இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என்றும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் ஆர்வம் உள்ளவர்கள் மனம் மாற மாட்டார்கள், எங்களுடன் இருப்பார்கள் எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து சனிக்கிழமை செய்தியாளர்களிடத்தில் கூறுகையில், “பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இண்டியா அணியில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நிதீஷ் குமாருடன் பேசுவதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பலமுறை முயன்றார். ஆனால் நிதீஷ் குமார் பிஸியாக இருக்கிறார். அதே சமயம் நிதீஷ் குமார் அழைக்கும்போது, மல்லிகார்ஜுன கார்கே சில கூட்டங்களில் இருந்தார். இண்டியா கூட்டணியின் முதல் கூட்டம் ஜூன் 23, 2023 அன்று பாட்னாவில் நடந்தது என்பதை மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அப்போது பிஹார் முதல்வர் கூட்டத்தை தொகுத்து வழங்கினார். இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடந்தது. அங்கு எங்களுடைய கூட்டணிக்கு இண்டியா கூட்டணி எனப் பெயர் சூட்டப்பட்டது.

அதில் நிதிஷ் குமாரின் பங்கு மிகவும் முக்கியமானது. உறுதிப்படுத்தப்படாத தகவல் குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். இண்டியா கூட்டணியை வலுப்படுத்துவது ஒவ்வொரு கட்சியின் பொறுப்பாகும். அதற்கான முயற்சியில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சாதகமாக நடந்து வருவதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். அகிலேஷ் யாதவுடன் அசோக் கெலாட் தொடர்பில் இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.