இசையமைப்பாளர் இளையராஜா மகள் பாடகி பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இலங்கையில் காலமானார். அவரது உடல் நேற்று மாலை சென்னை கொண்டுவரப்பட்டது.

அங்கு அவரது உடல், குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்குக் கொண்டு வரப்பட்டது. தேனி லோயர்கேம்ப் பகுதியில் இளையராஜாவிற்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி பவதாரிணியின் உடல் சென்னையில் இருந்து இன்று காலை 11 மணிக்கு தேனி கொண்டு வரப்பட்டது.
அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பண்ணைப்புரம் கிராம் மக்கள், உறவினர்கள், திரை பிரபலங்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். பாடகி பவதாரிணியின் சகோதரர்கள் யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, தந்தை இளையராஜா ஆகியோர் வந்தனர்.

அதனைத் தொடர்ந்து உறவினரும் இயக்குநருமான வெங்கட்பிரபு, நடிகர் பிரேம்ஜி, நடிகர் அரவிந்த், நடிகர் கிருஷ்ணா, நடிகர் ஜான் விஜய், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் அமீர், ஓபிஎஸ், தேனி எம்.பி ரவீந்திரநாத், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன், தி.மு.க தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதில் இயக்குநர் பாரதிராஜா பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யும் வரை இளையராஜாவுடன் இருந்து கண்ணீர் மல்க அவருக்கு ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து குடும்ப சம்பர்தாயப்படி சடங்குகள் செய்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கினர். பவதாரிணி பாடி தேசிய விருது பெற்ற பாடல், “மயில் போல பொண்ணு ஒண்ணு… கிளி போல பாட்டு ஒண்ணு”. இறுதியாக அந்தப் பாடலை உறவினர்கள் அனைவரும் ஒன்றாகப் பாடி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.