`நீர்நிலைகளை சீரமைப்பதும் வழிபாடுதான்' நெல்லை முத்துகிருஷ்ணனுக்கு சூழல் விருது..!

கிணறு, குளங்கள், ஆறுகளை தூர்வாரி, தூய்மைப்படுத்தி, சீர் செய்த பணிக்காக  திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனுக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதினை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

முன்னாள் விமானப்படைஞரான முத்துகிருஷ்ணன் (வயது 70) கடந்த 33 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு ஆலய பணிகளுடன் சுற்றுச்சூழல் பணிகளையும் செய்து வருகிறார்.  

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது பெற்ற முத்துகிருஷ்ணன்

திருநெல்வேலியின் ஜீவநாடியான தாமிரபரணி நதி அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை தடுக்க வேண்டும் என்று நினைத்த, சென்னை அண்ணா பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் க.சக்திநாதன் இவர்களுடைய பணிகளை பார்த்து `நம் தாமிரபரணி’ என்ற அமைப்பை உருவாக்கி, முத்துகிருஷ்ணனை அதற்கு தலைமை பொறுப்பாளராக ஆக்கினார்.

பல்வேறு அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நெல்லை உழவாரப்பணி தொண்டர்களை கொண்ட குழுவாக இணைந்து இவர்கள் தாமிரபரணி நதிக்கரைகளை சீர்படுத்தி புத்துயிர் கொடுத்தனர்.

அமைதியான முறையில் அவர் செய்து வரும் இந்த சாதனையை பாராட்டி சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த குடியரசு தினவிழாவில் கவர்னர் ஆர் என்.ரவி அவருக்கு இரண்டு லட்ச ரூபாய் காசோலையுடன் கூடிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விருதினை வழங்கி கௌரவித்தார்.

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் நிறைய நீர்நிலைகளை தூர்வாரி நடைமுறையில் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனர். மேலும் கும்பகோணம், திருச்சி, திருக்கடவூர், காஞ்சிபுரம், என பிற மாவட்டங்களிலும் உள்ள ஆலயப் பணியோடு அங்குள்ள நீர்நிலைகளை தூய்மை செய்தல், மரங்களை நட்டு வளர்த்தல் ஆகிய பணிகளையும் செய்துள்ளனர்.

நீர்நிலை

தமிழகம் தாண்டி கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டை, விருபாக்சிபுரம், ஹம்பி ஆகிய பகுதிகளிலும் இவர்கள் பணி தொடர்ந்தது. ஆண்டுக்கு நான்கு, ஐந்து முறை வெளி மாவட்டகளுக்குச் சென்று பணி செய்வது வழக்கம். அங்கு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நதிக்கரைகள்,  நீர் நிலைப் பகுதிகளை தூய்மை செய்து, அதற்கேற்ற மரங்களை நட்டு வளர்த்துள்ளனர்.

முட்புதர்கள் மூடிய நிலையில் உள்ள எராளமான தெப்பக்குளங்களில் முட்களை அகற்றுதல், தூர்வாருதல், சுற்றுச்சுவர்களை புதுப்பித்தல், குப்பைகளை அகற்றுதல் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

2016-ல் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் 2.6 ஏக்கர் அளவுள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் தெப்பகுளத்தை தூர்வாரி செப்பனிட்டனர். 35 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்த 1.6 ஏக்கர் அளவுள்ள பூமிநாதசுவாமி கோவில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் வழிகளை எல்லாம் மிகவும் பாடுபட்டு சீராக்கி தண்ணீர் கொண்டு வந்தனர்.

சீரமைப்பு பணியில்

தூர்வாரும் போது அங்குள்ள விவசாயிகளுக்கு தேவைபடும் இந்த சத்துள்ள மண்ணை (சகதி உரங்களை) டிராக்டர் கொண்டு வந்தால் எடுத்துச் செல்லலாம் என்று தெரிவித்தனர். இவர்கள் ஜேசிபி மூலம் 500 டிராக்டர்களுக்கு மண்ணை அள்ளி போட்டனர். விவசாயிகளின் வயல் வரப்புகளுக்கு அவை பயன்பட்டது. இன்று தண்ணீர் நிறைந்து, பலரும் பயனடையும் விதமாக அழகாக காட்சி அளிக்கிறது அந்த தெப்பகுளம். இதனால், சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.

குளம் சீரமைப்பு பணியில்…

திருநெல்வேலியில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் தாமிரபரணி புஷ்கரம், இந்தமுறை அக்டோபர் 2018-ல் கொண்டாடப்பட்டது. மக்கள் இந்த சமயத்தில் எந்த வித சிரமங்களையும் சந்திக்க கூடாது என்று, நதிகளையும், நதிக்கரையோர பகுதிகள், படித்துறைகள், மண்டபங்கள் ஆகியவற்றையும் தாமிரபரணி புஷ்கரத்துக்காக ஓராண்டு காலமாக வாரந்தோறும் தொடர்ந்து தூய்மை செய்தனர்.

குளம் சீரமைப்பு பணியில்

பொதிகை மலை தொடங்கி புன்னைக்காயல் வரை தாமிரபரணி ஆறு பாய்கின்ற 149 கிலோ மீட்டர் தூரத்தில் 64 தீர்த்த கட்டங்கள் மட்டுமே பக்தர்கள் நீராடி வழிபட அனுமதிக்கப்பட்டது. அதில் 35 தீர்த்த கட்டங்களில் மிகவும் சிறப்பாக இவர்கள் பணிகளை செய்தனர்.

ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பாராட்டு

முட்களை அகற்றி  மலம், மது பாட்டில்கள், பழைய துணிகள் என வண்டி வண்டியாக குப்பைகள் அனைத்தையும் நீக்கி தூய்மை செய்தனர். மக்களுக்கு பயன்படும் விதமாக அவ்விடங்களையும், மண்டபங்களையும் செப்பனிட்டு திருப்பணி செய்தது முக்கியமானது. தாமிரபரணி புஷ்கரத்துக்கு இவர்கள் செய்த பணிகளால் மக்கள் தூய்மையான இடங்களில் நீராடினர்.

இந்த பணிகளை கண்ட அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இவர்களை பாராட்டி கௌரவித்தார்.

இதே போல காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில்களில் உள்ள பெரிய தெப்பகுளங்களை  தூர்வாரினார்கள். ராமேஸ்வரத்தில் விவேகானந்தா கேந்திர கவனிப்பில் உள்ள ஆறு முக்கிய தீர்த்த கட்டங்களில் அவர்களின் வேண்டுகோளின் படி உடனிருந்து மொத்தம் ஆறு நாள்கள் பணி செய்தனர்.

இப்படி 100-க்கும் மேற்ப்பட்ட ஊர்களில் இவர்கள் செய்த பணிகளால், தெப்பக்குளங்கள் மற்றும் கோவில் கிணறுகள் தூர்வாரப்பாட்டு நீர் தேக்கம் பெற்றது.  

ஆளுநர் விருது வழங்கிய நிகழ்வு.

ஒவ்வொரு ஊர்களிலும் அந்த நிலம், மற்றும் சூழலுக்கு ஏற்ப மரங்கள் வளரும். காலப்போக்கில் பல காரணங்களால் அங்குள்ள மரங்கள் அழியும் நிலை வந்திருக்கும். அந்த பகுதிகளை தேடி பிடித்து அதற்குரிய மரங்களை நட்டி வளர்த்துள்ளனர். பல கிராமங்களிலும், ஆலயங்களிலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் இவர்கள் வளர்த்த மரங்கள் ஏராளம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது பெற்ற முத்துகிருஷ்ணன்

பொதுவாக, உழவாரப்பணி என்றால் ஆலயங்களை தூய்மை செய்வார்கள் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். இவர்கள் அத்துடன் நீர்நிலைகள் செப்பனிடுதல், மரக்கன்றுகளை வளர்த்தல் என சூழல் பணிகளை செய்து வருகின்றனர். இது குறித்து கேட்டபோது,

“நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களும் ஆலய  வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்கு நிறைய உதாரணங்களை கூறலாம். மரங்கள், நதிகள், தெப்பக்குளங்கள், தீர்த்தக்கட்டங்கள், ஆகியவற்றை புனிதமாக கருதி கொண்டாடி வருகின்றோம். இயற்கை வழிபாடு இன்றுவரை மக்களிடம் உள்ளது. எனவே ஆலயப் பணியுடன் காற்றை தூய்மை செய்யும் மரங்களை வளர்த்தல், நீர்நிலைகளை தூய்மை செய்தல் என சூழல் பணிகளையும் செய்து வருகின்றோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ இயற்கையை பேணுதல் அவசியமானது” என்றார் முத்துகிருஷ்ணன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.