ராஜபாளையம்: ராஜபாளையம் மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, அன்னப்பராஜா மேல்நிலை பள்ளி, என்.ஏ ராமச்சந்திரராஜா குருகுலம் ஆகியவற்றில் இஸ்ரோ விஞ்ஞானியுடன் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாக துணை இயக்குநர் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர். அப்போது பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இஸ்ரோவில் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் தொழிநுட்ப அலுவலர் பணி வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
அதன்பின் அன்னப்பராஜா மேல்நிலை பள்ளியில் இஸ்ரோ துணை இயக்குநர் சந்திரசேகர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அளித்த பேட்டி: பள்ளி, குருகுலம் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றிற்கு நேரில் சென்று மாணவர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. இஸ்ரோ அமைப்பில் ஐடிஐ, பாலிடெக்னிக் முடித்தவர்கள் வடிமைப்பு பணியில் அதிகமாக ஈடுபடுகின்றனர். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலங்களில் இருந்து அதிகமானோர் விண்வெளி துறைக்கு வருகின்றனர். உலகமே புத்தாண்டை பட்டாசு வெடித்து கொண்டாடிய போது, இந்தியா எக்போசாட் செயற்கைகோள் அனுப்பினோம்.
அது நிறைய அறிவியல் தகவல்களை நமக்கு அளித்து வருகிறது. அடுத்த மாதம் பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுவதற்கான பணி நடக்கிறது. விரைவில் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும். ககன்யான் திட்டம் இந்திய விண்வெளி வரலாற்றின் மிகப்பெரிய மைல்கல் ஆகும். அனைத்து விஞ்ஞானிகளும் ககன்யான் வடிவமைப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மனிதனை விண்வெளிக்கு அனுப்ப இத்திட்டம் உதவும். முதற்கட்டமாக ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பி, பத்திரமாக தரை இறக்குவது குறித்த சோதனை நடைபெறுகிறது. இந்த ஆண்டு இந்தியாவிற்கு காகன்யான் ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.