ஐசரி கணேஷ் தயாரிப்பில் ‘மிர்ச்சி’ சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, விடிவி கணேஷ் எனப் பலர் நடிக்க ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவில் ‘சுமோ’ படத்தை இயக்கியிருந்தார், இயக்குநர் எஸ்.பி.ஹோசிமின்.
இந்தப் படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப ஜப்பானின் இருந்து ரியல் சுமோ விளையாட்டு வீரரையும் நடிக்க வைத்திருந்தார்கள். ஏற்கெனவே மிர்ச்சி விஜய், பிரியா ஆனந்த் இருவரின் நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது நினைவிருக்கலாம்.

‘ஜப்பானில் இருந்து சென்னைக்கு வந்து மாட்டிக்கொள்ளும் சுமோ வீரரை, ஹீரோ சிவா எப்படி மீ்ண்டும் ஜப்பானுக்கு அழைத்துச் செல்கிறார்.’ என்கிற ஒன்லைனில் ஆரம்பித்து படத்தின் போஸ்டர், டிரெய்லர் என வித்தியாச அனுபவத்தை கொடுத்த ‘சுமோ’, 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவிருந்தது.
கொரோனாவால் படம் தள்ளிப்போக ஓடிடியில் நேரடியாக ரிலீஸாக இருப்பதாக செய்திகளும் வந்தன. ஆனால், இது குழந்தைகளுக்கான படம் என்பதாலும் படத்தின் பாதி காட்சிகள் ஜப்பான், டோக்கியோவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருப்பதாலும் தியேட்டர் ரிலீஸ் தான் இதற்கு சரியாக இருக்கும் என்று பொறுமை காத்தது, படக்குழு. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகியும் படத்தின் ரிலீஸ் குறித்து செய்தி வராமல் இருந்த நிலையில், தற்போது ‘சுமோ’ படத்தின் ரிலீஸ் வேலைகள் நடப்பதாகத் தகவல்கள் வந்தன. விசாரித்து பார்க்கும் போது இது உண்மையான தகவல் தான். ஐசரி கணேஷின் தயாரிப்பில் ரிலீஸாகாமல் இருந்து ‘சிங்கப்பூர் சலூன்’, ‘சுமோ’, ‘ஜோஸ்வா’ போன்ற படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதில் முதல் படமாக ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதன் பின்னர் ஏப்ரலில் ‘சுமோ’ படத்தை வெளியிடலாம் என வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். சின்னச் சின்ன திருத்தங்கள் மட்டும் செய்து படத்தை ரிலீஸுக்குத் தயாராக்கியிருக்கிறார்கள். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட்’ நிறுவனம் வெளியிடுவதைப் போல ‘சுமோ’, ‘ஜோஸ்வா’ படங்களையும் அவர்களே வெளியிட நிறைய வாய்ப்பிருக்கிறது.