ஜெருசலேம்:மேற்காசிய நாடான ஈரான், ஒரே நேரத்தில் மூன்று விண்கலங்களை விண்ணுக்கு செலுத்தி சாதனை படைத்தது; இது மேற்கத்திய நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. இது தன்னிச்சையாக பல ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. இதற்கு, அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், சிமோர்க் என்ற ராக்கெட் வாயிலாக, ஈரான் நேற்று மூன்று விண்கலங்களை செலுத்தியது. தொலைத் தொடர்பு சேவை மற்றும் ஆராய்ச்சிகளுக்காக இந்த விண்கலங்கள் அனுப்பப்பட்டதாக ஈரான் கூறிஉள்ளது.
தொடர்ந்து ஐந்து முறை நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில், இந்த ராக்கெட் வெற்றிகரமாக நேற்று செலுத்தப்பட்டது.
இந்நிலையில், ஈரானின் இந்த வெற்றி, மேற்கத்திய நாடுகளை கலக்கமடையச் செய்துள்ளது.
அணு ஆயுத ஏவுகணைகள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்துக்கு, இந்த ராக்கெட் தொழில்நுட்பம் உதவும் என்பதே அதற்குக் காரணம். இந்த ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பல அணு ஆயுத ஏவுகணைகள் தயாரிப்பில் ஈரான் ஈடுபடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மேற்காசியாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. இதில், ஈரான் நேரடியாக தலையிடவில்லை. அதே நேரத்தில், ஹவுதி உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்து வருகிறது.
ஏற்கனவே தடைகளை மீறி, ஈரான் பல ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.
தற்போது ராக்கெட் வெற்றியைத் தொடர்ந்து, புதிய ஏவுகணைகள் தயாரிப்பில் ஈரான் ஈடுபடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement