ஹமாஸ் தாக்குதலுடன் ஐ.நா.வுக்கு தொடர்பு…? இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு

நியூயார்க்,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தொடங்கியது முதல் இதுவரை ஐ.நா. நிவாரணம் மற்றும் பணிகள் கழகத்தின் (யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ.) பணியாளர்கள் 152 பேர் உயிரிழந்து உள்ளனர். ஐ.நா. அமைப்பை சேர்ந்த 13 ஆயிரம் பேர் காசாவில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதுடன் இந்த யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ. பணியாளர்களுக்கு தொடர்பு உள்ளது என்று இஸ்ரேல் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளது.

எனினும், இதில் எத்தனை பேர் வரை தொடர்பில் உள்ளனர் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், அமெரிக்கா மற்றும் ஐ.நா. பணியாளர்கள் உள்பட 12 பணியாளர்களின் விவரங்களை இஸ்ரேல் பகிர்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து, 12 பணியாளர்களில் 9 பணியாளர்களை பணி நீக்கம் செய்து, ஐ.நா. பொது செயலாளர் ஆன்டானியோ கட்டிரெஸ் அறிவித்து உள்ளார். இவர்களில் ஒரு பணியாளர் உயிரிழந்து விட்டார். மற்ற 2 பேரின் அடையாளங்கள் இன்னும் தெளிவாக தெரியவரவில்லை.

இந்த கடுமையான குற்றச்சாட்டுகளின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்டிரெஸ் உறுதி கூறியுள்ளார். இதுபற்றி விசாரணையும் நடந்து வருகிறது. என்றபோதும், இந்த அமைப்புக்கு நாடுகள் தொடர்ந்து நிதியுதவியை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

ஏனெனில், 20 லட்சம் காசா மக்களின் தினசரி வாழ்வுக்கு தேவையான முக்கிய ஆதரவை இந்த அமைப்பு வழங்கி வருகிறது.

அதனுடன், தற்போதுள்ள நிதியின் உதவியால் மொத்த காசா மக்கள் தொகைக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் வருகிற பிப்ரவரியில் பூர்த்தி செய்வது என்பது இயலாத விசயம் என்று கட்டிரெஸ் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

ஆனால், இந்த அமைப்புக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளை அடுத்து, 9 நாடுகள் காசாவுக்கு வழங்கி வந்த நிதியுதவியை தற்காலிக அடிப்படையில் நிறுத்தி வைத்துள்ளன. அவற்றில் அமெரிக்காவும் அடங்கும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.