ராமர் கோவில் விழாவில் கலந்து கொண்ட முஸ்லிம் மதகுருவுக்கு கொலை மிரட்டல்

அயோத்தி,

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 22-ந்தேதி சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் பதவி வகிக்கும் உமர் அகமது இலியாசி என்பவருக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து அவரும் விழாவில் பங்கேற்றார். இதற்கடுத்து சில தினங்களில் அவருக்கு எதிராக பத்வா பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த ஞாயிற்று கிழமை பத்வா பிறப்பிக்கப்பட்டது. ஆனால், விழா முடிந்த அன்று மாலையில் இருந்து தொடர்ந்து தொலைபேசி வழியே மிரட்டல் அழைப்புகள் வந்தன என கூறியுள்ளார்.

அவருக்கு எதிரான பத்வா பற்றி இமாம் பேசும்போது, என்னையும், நாட்டையும் நேசிப்பவர்கள் எனக்கு ஆதரவு தருவார்கள். என்னை வெறுப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

அவருக்கு எதிராக ஒரு சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு கூறியுள்ள அவர், வெறுப்புக்கான சூழலை ஒரு கும்பல் உருவாக்க முயற்சித்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்த பின்னர் 2 நாட்கள் வரை அதனை பற்றியே இலியாசி சிந்தித்து வந்துள்ளார். அதன்பின்னரே அயோத்திக்கு செல்வது என முடிவு செய்திருக்கிறார். விழாவில் பங்கேற்ற பின்னர் அவர், நம்முடைய நம்பிக்கைகள் வேறுபடலாம். ஆனால், நம்முடைய பெரிய மதம் மனிதநேயமேயாகும் என்று கூறினார்.

நல்லிணக்கத்திற்காகவும், நாட்டுக்காகவும் விழாவுக்கு சென்றேன் என கூறும் அவர், என்னுடைய வாழ்க்கையில் எடுத்த பெரிய முடிவு இது என்றும் கூறுகிறார்.

சிலர் எனக்கும், என்னுடைய குடும்பத்தினருக்கும் எதிராக கொலை மிரட்டல்களை விடுக்கின்றனர். அவர்களுக்கு நான் தெளிவாக கூற விரும்புவது என்னவென்றால், இந்தியா ஓர் இஸ்லாமிய நாடு அல்ல. நான் பரப்ப கூடிய, அன்பின் செய்தி மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை விரும்பாதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.