சமீபத்தில் உணவுகளை ஃப்யூஷன் (fusion) செய்யும் வழக்கம் அதிகரித்துள்ளது. ஃப்யூஷன் செய்யப்பட்ட உணவுகளில் அரிதாக சில உணவுகளே நன்றாக இருந்தாலும், மற்ற உணவுகள் ‘இதையெல்லாம் எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ’ என சிந்திக்க வைப்பவையாகவே உள்ளன.

நூடுல்ஸ், குலோப்ஜாமுன், முட்டை, பிஸ்கட் போன்ற உணவுகளில் ஃப்யூஷன் செய்து வந்தவர்கள் தற்போது இட்லியையும் விட்டு வைக்கவில்லை. இதனால் `இட்லியை யாராவது காப்பாற்றுங்களேன்’, `இட்லிக்கு நீதி தேவை’ என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
உணவுகள் குறித்து தொடர்ச்சியாகப் பதிவிடும் சுக்ரித் ஜெயின் என்பவர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தெருக்கடையில் ஒருவர் இட்லியை முதலில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதன் மீது காரச் சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் ஊற்றி ஐஸ்கிரீம் வைத்து நன்றாக மசிய நசுக்குகிறார்.
அதனை துண்டாக்கி ஒரு பிளேட்டில் வைத்து அதன்மீது அரை இட்லியும் சட்னியும் வைத்துக் கொடுக்கிறார். உண்மையிலேயே இந்த காம்பினேஷன் பார்ப்பவர்களைத் திகைக்க வைக்கிறது.
பொதுவாக குலோப்ஜாமுன் அல்லது சில ஐஸ்கிரீம் ப்ளேவர்களை ஒன்றாகக் கலந்து இப்படிக் கொடுப்பார்கள். ஆனால், இட்லிக்கு இவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்ய எப்படித்தான் அவர்களுக்கு மனம் வந்ததோ தெரியவில்லை.

ஜனவரி 17 அன்று இந்த வீடியோ பதிவிடப்பட்ட நிலையில் 12.7 மில்லியன் பேர் இந்த வீடியோவை கண்டுள்ளனர். இந்த வீடியோவின் ஹைலைட்டே அதற்கு வரும் கமென்ட்டுகள் தான், `இதனை கண்டுபிடித்தவரை கைது செய்ய வேண்டும்’… `பிரேக் அப் தான் அதிகம் வலிக்கும் என்று யார் சொன்னது’… `இட்லிக்கு நீதி வேண்டும்’… `இது சட்டவிரோத செயல்’… என்று நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர்.
இது போல நீங்கள் கண்டு மனம் வருந்திய ஃப்யூஷன் உணவுகள் இருந்தால் கமென்டில் குறிப்பிடுங்கள்!