சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த அமித்குமார் அகர்வால் (50) என்பவர் கடந்த மாதம் 30-ம் தேதி, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `என்னுடைய சகோதரி அம்ரிதாவின் வீடு ஈஞ்சம்பாக்கம் ஆலிவ் பீச் பகுதியில் உள்ளது. அந்த வீட்டில் பின்பக்கமாக நுழைந்த கொள்ளையர்கள், வைரம், தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். எனவே கொள்ளைபோன பொருள்களை கண்டுபிடித்து தந்து, குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் வழக்கு பதிவுசெய்து விசாரித்தார்.

இதையடுத்து நீலாங்கரை உதவி கமிஷனர் பாரத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் மகேஷ் குமார், புகழேந்தி, பாலசுப்பிரமணியன், வளர்மதி, மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார், சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அப்போது காணாமல்போன லாக்கர்களில் இரண்டு லாக்கர் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த கைரேகைகள் அடிப்படையில் விசாரித்தபோது கொள்ளையர்கள் குறித்த தகவல்கள் தெரியவந்தன. இதில் சென்னையில் வசிக்கும் நேபாளத்தைச் சேர்ந்த பிரகாஷ் கட்கா என்பவரின்மீது போலீஸாருக்குச் சந்தேகம் எழுந்தது. அதனால் பிரகாஷைப் பிடித்து விசாரித்தபோது கொள்ளையர்கள் குறித்த முழு தகவல்களும் போலீஸாருக்குக் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் கொள்ளை சம்பவத்துக்கு திட்டம் போட்டுக் கொடுத்த பிரகாஷ் மற்றும் அவரின் கூட்டாளிகளான மனோஜ் மாசி, ஜனக் பிரசாத் ஜெய்சில் ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 90 சதவிகிதத்துக்கும் மேல் திருடப்பட்ட பொருள்கள் மீட்கப்பட்டது. இன்னும் சிலரை போலீஸார் தேடிவருகிறார்கள்.
கொள்ளையர்கள் சிக்கியது எப்படி என தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். “கொள்ளை நடந்த வீட்டின் உரிமையாளரின் குடும்பம் ஜெர்மனியில் தொழில் நிமித்தமாக வசித்து வருகிறது. அதனால் சென்னையில் உள்ள வீட்டில் செக்யூரிட்டியும் பணிப்பெண்ணும் மட்டுமே இருந்தனர். சம்பவத்தன்று, வீட்டின் பின்பக்கமாக உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், வைரம், தங்கம், பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

கொள்ளை தொடர்பாக எங்களுக்குப் புகாரளித்ததும் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தோம். அப்போது நேபாளத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், கொள்ளை நடந்த வீட்டின் அருகே சம்பவத்தன்று சென்ற தகவல் கிடைத்தது. அதனால் பிரகாஷ் குறித்து விசாரித்தபோது அவர், வீட்டின் உரிமையாளரிடம் சில மாதங்களுக்கு முன்பு ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வந்தது தெரியவந்தது. அதனால் வீட்டின் உரிமையாளர், வெளிநாட்டுக்கு செல்லும் தகவலைத் தெரிந்து கொண்ட பிரகாஷ், நேபாளத்திலிருக்கும் பிரபல கொள்ளையர்கள் மனோஜ் மாசி, ஜனக் பிரசாத் ஜெய்சில் ஆகியோருக்கு இந்தத் தகவலை போனில் தெரிவித்து சென்னைக்கு வரவழைத்திருக்கிறார்.
இதையடுத்து மனோஜ் மாசி, ஜனக் பிரசாத் ஜெய்சில், லலித்குமார் கர்மா உள்பட சிலர் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள், பிரகாஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளை குறித்து திட்டம் போட்டிருக்கிறார்கள். பின்னர், வீட்டின் பின்பக்கத்தில் உள்ள காலி மைதானத்துக்குச் சென்ற கொள்ளைக் கும்பல் நள்ளிரவில் உயரமான காம்பவுன்ட் சுவரில் கயிறு மூலம் ஏறி, வீட்டின் முதல் மாடிக்குச் சென்றிருக்கிறார்கள். பின்னர் கதவு மற்றும் லாக்கர்களை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்திருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து ஆட்டோ மூலம் கோயம்பேடு வந்த கொள்ளைக் கும்பல் அங்கிருந்து பேருந்தில் பெங்களூருக்கு சென்றிருக்கிறார்கள். இதில் பிரகாஷ் மட்டும் கொள்ளை கும்பலுடன் செல்லவில்லை. அதனால் அவருக்குரிய பங்கை கொள்ளை கும்பல் பிரித்துக் கொடுத்து விட்டு தப்பிச் சென்றிருக்கிறது.

பிரகாஷ் அளித்த தகவலின்படி மனோஜ் மாசி, ஜனக் பிரசாத் ஜெய்சில் ஆகியோரைப் பிடித்து அவர்களிடமிருந்த தங்கம், வைரம், பணத்தைப் பறிமுதல் செய்து விட்டோம். மற்றவர்களைத் தேடிவருகிறோம். இந்தக் கொள்ளை வழக்கில் கைதான மனோஜ் மாசி, ஜனக் பிரசாத் ஜெய்சில் ஆகியோர்மீது மும்பை, பெங்களுரூ உள்ளிட்ட இடங்களில் கொள்ளை வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் பிரபலமான கொள்ளையர்கள். இவர்கள்தான் சென்னை தொழிலதிபர் வீட்டுக்குள் சென்று கொள்ளையடித்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.
இந்தக் கொள்ளை வழக்கை திறம்பட விசாரித்து கொள்ளையர்களைப் பிடித்த தனிப்படை போலீஸாரை அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக் குமார், இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்ஹா ஆகியோர் பாராட்டினர்.