இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இதற்கிடையில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, “காங்கிரஸ் கட்சிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். ஆனால், நாங்கள் இன்னும்கூட இந்தியா கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறோம். பா.ஜ.க-வை எதிர்த்துப் போரிட எனக்குச் சக்தி இருக்கிறது” என அதிருப்தி தெரிவித்திருந்தார்.

அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “மம்தா பானர்ஜி எனக்கு நெருக்கமானவர்தான். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் சீட் பங்கீடு பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு மம்தா பானர்ஜி நெருக்கமானவர் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். சில நேரங்களில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்கிறார்கள். இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும்.
ஆனால், காங்கிரஸ் – திரிணாமுல் காங்கிரஸ் இடையேயான உறவை அவர்கள் பாதிக்கமாட்டார்கள்” எனக் கூறியிருந்ததார்.
இந்த நிலையில், இன்று மம்தா குறித்து மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “மம்தா பானர்ஜி இன்னும் `இந்தியா’ கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறார், கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ் குமார் பா.ஜ.க-வுக்குச் சென்றுவிட்டார். அவர் வெளியேறியதற்கான காரணங்கள் என்ன என்பதை உங்களாலேயே யூகிக்க முடியும். பரவாயில்லை….

பீகாரில் இந்தியா கூட்டணியாக இணைந்து போராடுவோம். எனவே, இந்தியா கூட்டணியில் பிளவு என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தொகுதிப் பங்கீடு தொடர்பாகக் கட்சிகளிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் சாதாரணமானவை. அதைப் பேசுபொருளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.